Jawan Box Office - வசூலில் மாஸ் காட்டும் ஜவான்.. முதல் நாளில் அடித்து தூக்கி சம்பவம் செய்த ஷாருக்கான்
மும்பை: Jawan First Day Box Office (ஜவான் முதல் நாள் வசூல்) நேற்று வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜவான். அனிருத் இசையமைக்க ஷாருக்கானே படத்தை தயாரித்திருக்கிறார். அறிவித்தபடி படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியானது. பதான் படம் பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜவான் வெளியானதால் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

நல்ல ரெஸ்பான்ஸ்: அட்லீ ஹிந்தியில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்திருப்பதால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருந்தது. அதேபோல் ஷாருக்கான் ரசிகர்களும் படத்தை எதிர்பார்த்தனர். இப்படி பல எதிர்பார்ப்புடன் படம் சென்றவர்களில் பெரும்பாலானோர் படத்துக்கு நல்ல விமர்சனத்தையே கொடுத்து வந்தனர்.
அட்லீக்கு பாராட்டு: முக்கியமாக ஷாருக்கானை பல்வேறு கெட்டப்புகளில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம்தான் பட்டனர். அவரை இப்படியும் பயன்படுத்தலாம் என அட்லீ பாலிவுட்டுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் என புகழும் ரசிகர்கள் ஒரு கமர்ஷியல் கதையை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் பாலிவுட்டுக்கு சொல்லியிருக்கிறார் அட்லீ என தெரிவிக்கின்றனர். மேலும் அவரது மேக்கிங்கையும் ரசிகர்கள் பாராட்டியேவருகின்றனர்.
காப்பிதான்: ஒருபக்கம் பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்தாலும் அஹ்டற்கு ஈடாக நெகட்டிவ் விமர்சனமும் தலை தூக்கியுள்ளது. அதாவது ரமணா, சர்கார், ஆரம்பம் உள்ளிட்ட படங்களை கலந்து மூவி மிக்சராக அட்லீ கொடுத்திருக்கிறார். ஒரு சீன்கூட புதிதாக இல்லை. படம் ரொம்பவே நீளமாக செல்கிறது. பல இடங்களில் லேக் ஆகியிருக்கிறது என தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.
பாக்ஸ் ஆபிஸ்: இந்நிலையில் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹிந்தியில் மட்டும் அந்தப் படம் 60லிருந்து 65 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தமாக இந்தியாவில் 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும்; உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைப் பார்த்த ஷாருக்கானின் ரசிகர்கள் இந்தியாவில் எப்போது தான் மட்டுமே வசூல் கிங் என்பதை இதன் மூலம் ஷாருக் உறுதிப்படுத்தியிருக்கிறார் என கூறிவருகின்றனர்.
1000 கோடி க்ளப்?: இதற்கிடையே ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படம் முதல் நாளில் 57 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருந்தது. தற்போது அதனை ஜவான் தாண்டியிருக்கிறது. எனவே இந்தப் படமும் விரைவில் 1000 கோடி க்ளப்பில் சேரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஷாருக்கானின் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











