KH 233 - கமல் - ஹெச்.வினோத் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்?.. லேட்டஸ்ட் தகவல்
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசனும் ஹெச்.வினோத்தும் இணைந்திருக்கும் படத்தின் ப்ரோமோ டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.
அஜித்துடன்கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படம் ஹிட்டானது.
கமல் - ஹெச்.வினோத்: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அதன்படி ஹெச்.வினோத் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ப்ரோமோ டீசர்: இந்நிலையில் இருவரும் இணையும் படத்தின் ப்ரோமோ டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி டீசரானது கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் ஆறாம் தேதி இரவு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்தப் படம் கமல் ஹாசனுக்கு 233ஆவது படமாக உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணிரத்னத்துடன் கமல் இணையும் படத்தின் டீசரும் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











