Nayanthara - வெள்ளத்தால் மூழ்கிய அன்னபூரணி.. நயன்தாரா களத்தில் இறங்கியும் வேலைக்கு ஆகலையே
சென்னை: Nayanthara (நயன் தாரா) நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் இரண்டு வார முடிவில் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு உயிர், உலக் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் நயன் சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி தந்தார்.

பாலிவுட்டில் அறிமுகம்: அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் நயனும் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கும் சிறப்பான வரவேற்பே கிடைத்திருக்கிறது. அவரது ஆக்ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் திரையுலகம் இன்னும் சில படங்களில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நயன் 75: இதற்கிடையே தமிழிலும் அவர் பிஸியாகவே இருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படம் தமிழில் கடைசியாக வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் இல்லாமல் அன்னபூரணி, மண்ணாங்கட்டி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் நயன். இதில் அன்னபூரணி திரைப்படம் அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னபூரணி: இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன் தாராவுடன் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் நயன், சமையல் கலைஞராக ஆசைப்படுவதும்; அதற்கு விழும் முட்டுக்கட்டைகள் மற்றும் அதை நயன் தாண்டுவதையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
படம் ரிலீஸ்; படமானது பெரும் எதிர்பார்ப்போடு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனத்தையே ரசிகர்கள் கொடுத்தனர். அதேபோல் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கூட்டமும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் நயன்தாரா புதிதாக ஒரு ட்ரிக் செய்தார். அதாவது தன்னுடைய படங்களுக்கு பெரிதாக எந்த ப்ரோமோஷனும் செய்யாத அவர் அன்னபூரணியை காப்பாற்றுவதற்காக பிரத்யேகமாக பேட்டியெல்லாம் கொடுத்தார்.
ஆனால் நயன்தாராவின் ப்ரோமோஷனும் மூழ்கிய அன்னபூரணியை காப்பாற்றவில்லையாம். அதாவது இரண்டு வார முடிவில் மொத்தமே 6 கோடி ரூபாய் அளவுக்குத்தான் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் கூறுகிறது. எவ்வளவு வேலை செய்தும் படத்தை காப்பாற்ற முடியவில்லையே என்ற அப்செட்டில் இருக்கிறாராம் அவர்.


Click it and Unblock the Notifications











