Salaar Box Office - பாக்ஸ் ஆபிஸை ரூல் செய்யும் சலார்.. பிரபாஸுக்கு சரியான கம்பேக்தான் போல.. முழு விவரம் உள்ளே
சென்னை: Salaar Box Office (சலார் பாக்ஸ் ஆபிஸ்) சலார் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரபாஸுக்கு இந்தப் படம் சரியான கம்பேக்காக அமைந்துவிட்டதை உணர்த்துவதாக மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.
பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் இரண்டு பாகங்களுமே பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பின. மேலும் தெலுங்கு சினிமாவும் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்வதும் பாகுபலிதான். அதன் காரணமாக பிரபாஸ் பெரிய அளவில் அறியப்பட்டார்.

சறுக்கல்கள்: பாகுபலி படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாகக்கூட ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். அந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது படம். ஆதிபுருஷ் படத்தில் நடித்ததெல்லாம் பிரபாஸுக்கு தேவையில்லாத வேலை என்றே பலரும் கூறினார்கள்.
சலார்: சூழல் இப்படி இருக்க எப்படியாவது ஒரு மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் பிரபாஸ். அதற்காக கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கும் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்திருக்கிறார் அவர். யஷ்ஷுக்கு எப்படி மிகப்பெரிய திருப்புமுனையை பிரசாந்த் கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் கொடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்.
சலார் ரிலீஸ்: இந்த சூழலில் சலார் படமானது நேற்று உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியானது. பிரசாந்த் நீலுடன் முதன்முறையாக பிரபாஸ் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றனர்.முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடினார்கள். குறிப்பாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படு பிரமாண்டமாக இருப்பதாக கூறிவருகின்றனர்.
கேஜிஎஃப் வாடை: ரசிகர்களில் ஒருதரப்பினர் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்துக்கு சுமாரான ரெஸ்பான்ஸையே கொடுத்திருக்கின்றனர். அதாவது யஷ்ஷுக்கு ஹிட் கொடுத்தது போல் பிரபாஸுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் அப்படியே கேஜிஎஃப் ஸ்டைலில் படத்தை அவர் எடுத்து வைத்திருப்பதாகவும்; அளவுக்கு அதிகமாகவே கேஜிஎஃப் வாடை அடிப்பதாகவும் விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்; இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக படம் தூள் கிளப்பியிருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் 170 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் இந்திய அளவி 135 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டன்கியை முடித்த சலார்: இதற்கிடையே நேற்று முன் தினம் ஷாருக்கான் நடிப்பில் டன்கி படம் வெளியானது. இதனால் சலார் படத்தை ஷாருக்கானின் டன்கி அசால்ட்டாக சம்பவம் செய்துவிடும் என்று ஷாருக்கின் ரசிகர்கள் கூறினர். ஆனால் சலார் படத்தின் முதல் நாள் வசூலைவிடவும் டன்கி படத்தின் முதல் நாள் வசூல் கம்மிதான் என்றும்; அநேகமாக இந்த ரேஸில் சலார்தான் வெல்லும் என்றும் பலர் கூற ஆரம்பித்திருக்கின்றனர். ஆகமொத்தம் இந்தப் படத்தின் மூலம் பிரபாஸுக்கு கம்பேக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











