Vijay - பிரியாணி மட்டுமில்லை.. விஜய்க்கு இந்த அசைவ உணவுகளும் பிடிக்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். 49 வயதானாலும் பார்ப்பதற்கு இன்னமும் கல்லூரி இளைஞர் போலவே இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. அவரை பார்க்கும் எல்லோரும் எப்படி இவருக்கு மட்டும் வயது குறைந்துகொண்டே செல்வது போன்று இருக்கிறதே என்பார்கள். அந்த அளவுக்கு தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார் விஜய்.
கோலிவுட்டில் டாப் ஹீரோ விஜய். அவர் நடிக்கும் படங்கள் ரொம்பவே அசால்ட்டாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைகின்றன. இதனாலேயே இப்போது அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் நம்பர் 1 என்று பலரும் சொல்கிறார்கள். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அந்தந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார்.

GOAT: கோட் படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், லைலா, மீனாட்சி சௌதரி, சினேகா, பிரேம்ஜி, வைபவ் என பலரும் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அநேகமாக படமானது பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற பிரமாண்ட வெற்றி படத்தை வெங்கட் பிரபு கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தின் மூலம் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
பட்டையை கிளப்பிய போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டையொட்டி படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. அதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு போஸ்டர் வெளியானது. இதுவரை வெளியான மூன்று போஸ்டர்களிலுமே விஜய்யின் லுக் மிரட்டலாக இருக்கிறது. முக்கியமாக அவரது தோற்றம் கல்லூரி இளைஞர் போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகித்தனர். மேலும் GOAT ஷூட்டிங்கின்போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் விஜய்.
ஸ்கூல் பையன்?: அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது க்ளீன் ஷேவ் செய்து சிம்ப்பிளான டி ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் பையன் கெட் அப் கொடுத்தால்கூட விஜய்க்கு செட் ஆகும்போலயே என்றும் கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டனர். இவை அனைத்துக்கும் காரணம் விஜய் தன்னுடைய உடலை படு ஃபிட்டாக வைத்திருப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடித்த உணவு: அவர் அப்படி தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு காரணம் அவரது உணவு முறை. அடிக்கடி அசைவம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர் விஜய். அவருக்கு ரொம்பவே பிடித்த உணவு என்றால் பிரியாணிதான் என அவரது மனைவி சங்கீதா தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சமையல் துறையில் பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் விஜய்க்கு பிடித்த உணவு குறித்து ஒரே பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
என்ன உணவு பிடிக்கும்: அவர் அளித்திருக்கும் பேட்டியில், "விஜய்க்கு சிக்கன் பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். அதேபோல் பிச்சுப்போட்ட சிக்கன், பெரி பெரி சிக்கன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதை நானே அவருக்கு செய்துகொடுத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு பாராட்டியும் இருக்கிறார். இவை மட்டுமின்றி மட்டனும்கூட விஜய்க்கு ரொம்பவே பிடிக்கும்"" என்றார். மாதம்பட்டி ரங்கராஜ்தான் பிரபலங்கள் பெரும்பாலானோர் வீட்டு விசேஷங்களுக்கு சமையல் பொறுப்பை எடுத்துக்கொள்பவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











