2024ல் செம ட்ரீட் இருக்கு.. தியேட்டரில் வெளியாகப்போகும் படங்கள் என்னென்ன தெரியுமா?..லிஸ்ட் உள்ளே
சென்னை: இந்த வருடம் பெரிய ஹீரோக்களின் படங்களான துணிவு, வாரிசு, ஜெயிலர், லியோ, வாத்தி உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அடுத்த வருடம் வரிசைக்கட்டி பெரிய ஹீரோக்கள் முதல் சின்ன ஹீரோக்கள் படங்கள் வரை ரிலீஸாகவிருக்கின்றன. அந்த லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.
கொரோனா வந்ததிலிருந்து ஓடிடி தளங்களின் வீச்சு அதிகரிக்கவே செய்திருக்கிறது. இதனால் திரையரங்குகளின் நிலை என்னவாகுமோ என்ற பதற்றம் ஒன்று உருவானது. சூர்யாக்கூட ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்களை நேரடியாக ஓடிடிக்கு கொடுத்தார். அதேபோல் விக்ரம் நடித்த மகான் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இருந்தாலும் விஜய், ரஜினி போன்றவர்கள் இன்னும் தியேட்டர் ரிலீஸை மறக்கவில்லை.

தியேட்டரின் முக்கியத்துவம்: என்னதான் ஓடிடியில் படங்கள் ரிலீஸாவது அதிகரித்திருந்தாலும் தியேட்டருக்கான முக்கியத்துவத்தை இன்னும் திரையுலகினர் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முக்கியமாக ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விரும்புகிறார்கள். இந்த சூழலில் அடுத்த வருடம் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன என்ற லிஸ்ட்டை பார்க்கலாம்.
வேட்டையன்: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இதன் டைட்டில் இண்ட்ரோ வீடியோ ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 68: விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் நடிப்பில் தளபதி 68 படம் உருவாகிவருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள். இப்படமும் அடுத்த ஆண்டு ஏதேனும் ஒரு பண்டிகைக்கு ரிலீஸாகும் என கருதப்படுகிறது.
விடாமுயற்சி: துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்த வருட தீபாவளிக்கே ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் விக்னேஷ் சிவன் உள்ளே வந்து வெளியே சென்றது; ஷூட்டிங் ஆரம்பிக்க லேட் ஆனது என பல காரணங்களால் அடுத்த வருடம் ரிலீஸாகும். இதன் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் மும்முரமாக நடந்துவருகிறது.
இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் படம் இந்தியன் 2. பல தடங்கல்களுக்கு பிறகு ஷூட்டிங் தொடங்கி இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகலாம் என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர் திரைப்படம். இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வருட டிசம்பர் மாதமே ரிலீஸாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் மீதம் இருந்ததால் ரிலீஸ் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி படமானது பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸாகிறது.
அயலான்: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரவிக்குமார். சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் மற்றும் இதர பணிகள் முடியாததால் வருட கணக்காக ரிலீஸாகாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க ஒருவழியாக அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது.
மெர்ரி கிறிஸ்துமஸ்: தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் கலக்கிவருகிறார் விஜய் சேதுபதி. அந்தவகையில் அவர் இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இதன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படமானது அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது.
லால் சலாம்: ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் லால் சலாம். ரஜினிகாந்த் இதில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. முதலில் பொங்கல் ரேஸில் லால் சலாம் இருந்தது. ஆனால் படக்குழு என்ன நினைத்ததோ தெரியவில்லை ரேஸிலிருந்து விலகிவிட்டது. எனவே இந்தப் படம் ஜனவரி 26 அல்லது பிப்ரவரி மாதத்தில் ரிலீஸாகலாம் என தெரிகிறது.
தங்கலான்: பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் பீரியட் படமாக உருவாகியிருக்கிறது. முக்கியமாக கோலார் தங்க வயலில் மக்கள் பட்ட கஷ்டங்களை பேசியிருக்கிறது. முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாவதாக இருந்த படம் தற்போது மார்ச் மாதம் ரிலீஸாகும் என்று கருதப்படுகிறது.
கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் படு பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம்தான் கங்குவா. சூர்யா, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. 3டி தொழிற்நுட்பத்தில் பல மொழிகளில் இந்தப் படமானது அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸாகலாம் என தெரிகிறது.
அதேபோல், கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்டார் படம் பிப்ரவரி மாதமும்; அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டிமாண்ட்டி காலனி ஜனவரி 26ஆம் தேதி. அருண் விஜய் நடித்திருக்கும் மிஷன் சேப்டர் 1 படம் ஜனவரி 11 அல்லது 12லும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் தனுஷ் 50 படமும் அடுத்த வருடம்தான் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











