தமிழ்நாட்டிலும் மெர்சல் காட்டும் ஜவான்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Jawan Box Office (ஜவான் பாக்ஸ் ஆபிஸ்) ஜவான் படம் தமிழ்நாட்டிலும் டீசண்ட்டான வசூலை வசூலித்துவருவதாக கூறப்படுகிறது.
இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில் அவர் இயக்கிய 4 படங்களில் பிகில் படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன.

ஜவான்: தமிழில் வலம் வந்த அட்லீ அடுத்ததாக ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்திருக்கும் முதல் படத்திலேயே ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. முதல் நாள் முதல் காட்சியில் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. எனவே தமிழை போல் ஹிந்தியிலும் அவர் தடம் பதித்துவிட்டார். இன்னும் சில வருடங்களுக்கு பாலிவுட்டில் அட்லீ பிஸியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
விமர்சனம்: அட்லீயின் இயக்கத்திற்கென்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் அவர் மற்ற படங்களை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. அதாவது ராஜா ராணி படம் மௌனராகம் என்றும், தெறி சத்ரியன் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் அட்லீ அதற்கெல்லாம் கவலைப்படவில்லை. 7 ஸ்வரங்களுக்குள்தான் ட்யூன் போட முடியும் என இந்த விவகாரத்துக்கு ஒரே ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார். தற்போது ஜவான் படத்தையும் அவர் காப்பி அடித்திருக்கிறார் என்றும்; இந்த முறை தனது படங்களையும் சேர்த்து மொத்தம் 23 படங்களை காப்பி அடித்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
மேக்கிங்கில் மெர்சல்: படத்தை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தாலும் அட்லீயின் மேக்கிங் வேறு தரத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு. குறிப்பாக தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் அட்லீ மேக்கிங் அவ்வளவு ரிச்சாக இருக்கும். அதைப் பார்த்த பலரும் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட மேக்கிங்கை கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார். ஷங்கரின் உதவி இயகுநர் என்பதை நிரூபித்துவிட்டார் என புகழ்ந்தனர். அதேபோல்தான் ஜவான் படத்திலும் அவரது மேக்கிங் இருந்ததாக ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர்.
வசூல்: இந்நிலையில் படத்தின் வசூல் அடித்து பட்டையை கிளப்பிவருகிறது. இதுவரை உலக அளவில் 570 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் அதிகம் இருந்தாலும் வசூலில் டீசண்ட் நிலையே இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரை தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய்வரை ஜவான் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











