Jawan Review - ஜவானுக்கு தமிழ்நாட்டில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?.. படம் பார்த்தவர்கள் சொல்வது இதுதான்
சென்னை:Jawan Review (ஜவான் விமர்சனம்) ஜவான் படத்துக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் எப்படி ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன் தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜவான். அனிருத் இசையமைப்பில் ஷாருக்கானே படத்தை தயாரித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா உள்ளிட்டோரைத் தொடர்ந்து தமிழிலிருந்து அட்லீயும் பாலிவுட்டில் படம் இயக்கியிருக்கிறார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் மீது நிலவியது.

படம் ரிலீஸ்: ஜவான் படமானது அறிவித்தபடி இன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. நாடு முழுவதும் ஷாருக்கானுக்கு ரசிகர்கள் இருப்பதால் பல மாநிலங்களின் திரையரங்குகள் இன்று திருவிழா கோலம் பூண்டிருந்தன. பட்டாசு வெடித்தும், கலர் பொடியை தூவியும் பட ரிலீஸை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர்.
எப்படி இருக்கிறது படம்: பதான் கொடுத்த வெற்றியை இந்தப் படத்திலும் ஷாருக்கான் தொடர வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் படத்தின் மேக்கிங் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக பல்வேறு கெட்டப்புகளில் ஷாருக்கான் வருவது சர்ப்ரைஸ் மொமண்ட் எனவும், சஞ்சய் தத்தின் எண்ட்ரி அதகளமாக இருந்தது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.
அட்லீக்கும் பாராட்டு: ஷாருக்கானுக்கு எவ்வளவு பாராட்டு வருகிறதோ அதே அளவு அட்லீக்கும் பாராட்டு குவிந்துவருகிறது. தான் ஷங்கரின் ஆஸ்தான சீடர் என்பதை ஒவ்வொரு படத்தின் மேக்கிங்கிலும் நிரூபித்த அட்லீ ஜவானில் அடுத்தக்கட்டத்துக்கு பாய்ந்திருக்கிறார் என்று புகழ் மாலை சூடுகின்றனர். மேலும் ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என பாலிவுட்டுக்கு அவர் பாடம் எடுத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் ரெஸ்பான்ஸ்: இந்நிலையில் ஜவான் படத்துக்கு தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றிருக்கிறது. படம் பார்த்த ஒரு ரசிகர் கூறுகையில், நயன்தாரா ஆக்ஷன் சூப்பராக இருக்கிறது. ஷாருக்கானைவிடவும் நன்றாக செய்திருக்கிறார். அனிருத்தின் இசையும் சூப்பர். படம் நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கலாம் என்றார். அதேபோல் ரசிகை ஒருவர் கூறுகையில் நயன்தாரா மிரட்டியிருக்கிறார். ரொம்ப நாள் ஆகிவிட்டது நயனை இப்படி பார்த்து. ஷாருக்கானுக்கு வயதே ஆகதா என்றார் பூரிப்புடன்.
இன்னொரு ரசிகர் பேசுகையில் விஜய் சேதுபதி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அனிருத்தின் பிஜிஎம்முக்காகவே படத்தை பார்க்கலாம். படத்தின் இரண்டாம் பாதி சூப்பராக இருக்கிறது. ஜெயிலருக்கு ஈடாக இந்தப் படத்தின் பின்னணி இசையும் இருக்கிறது. அவரைத் தொடர்ந்து பேசிய இன்னொரு ரசிகர் படம் மாஸாக இருக்கிறது. சோஷியல் மெசேஜை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார்கள். பிஜிஎம் எல்லாம் வேற லெவலில் இருந்தது. விஜய் சேதுபதி மாஸாக நடித்திருக்கிறார் என்றார்.
படம் பற்றி இன்னொரு ரசிகர் பேசுகையில், படம் ரொம்ப நீளமாக போகிறது. நிறைய இடத்தில் லேக் ஆகிறது. கதை ரீதியாக நமக்கு இது பழசுதான். ஆனால் அந்த பக்கம் க்ளிக் ஆகலாம். அனிருத் பிஜிஎம் ஓகே. டப்பிங்கில் பாடல்கள் எல்லாம் சுமாராகத்தான் இருந்தது. விஜய் சேதுபதி மட்டும் மாஸாக நடித்திருக்கிறார் என்றார். மற்றொரு ரசிகர் பேசுகையில், படம் ரொம்ப போராக இருக்கிறது. யாரும் காசு செலவு பண்ணாதீங்க. அப்புறம் சங்கடப்படுவீங்க. பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











