Kanguva - 1500 பேர் நடனம் எல்லாம் இல்லைங்க.. கங்குவா பற்றிய லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Kanguva (கங்குவா) கங்குவா படத்தின் ஓபனிங் பாடலுக்கு 1500 பேர் நடனம் ஆடியதாக தகவல் வெளியான சூழலில் அதுதொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
முன்னணி நடிகரான சூர்யா தற்போது கதை தேர்வு சிறப்பாக இருக்கிறது. அவரது கரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. மேலும் அவர் நடித்த சூரரைப் போற்று படம் தேசிய விருதையும் வென்றது.

கங்குவா: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் தற்போதைய காலத்தில் நடக்கும்படியும், சரித்திர காலத்தில் நடக்கும்படியும் உருவாகியிருக்கிறது. திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.
கங்குவா அர்த்தம் என்ன?: படத்தின் பெயர் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பெயருக்கான அர்த்தம் என்ன என்பது தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள். இதனையடுத்து கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என படத்தின் இயக்குநர் சிவா விளக்கமளித்திருந்தார். அர்த்தத்தை தெரிந்த பிறகும் மேலும் அந்தப் பெயர் ரசிகர்களுக்கு பிடித்துப்போய்விட்டது.
ஷூட்டிங்: இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் கங்குவா படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்தது. கொடைக்கானலில் வைத்து பீரியட் கால காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கடந்த மாதம் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னைக்கு வந்திறங்கியது படக்குழு.
1500 பேர் பாடலிலா?: சென்னையில் செட் போடப்பட்டு படத்தின் ஓபனிங் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதில் 1500 நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடினார்கள் என்றும் தகவல் வெளியானது. இதனையடுத்து லியோ படத்தில் ஏற்கனவே 2000 பேர் நடனம் ஆடியதாக கூறப்பட்ட சூழலில் கங்குவா பற்றிய இந்தத் தகவலும் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுமட்டுமின்றி விஜய்க்கு செம டஃப் கொடுக்கிறார் சூர்யா என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தனர்.
ஆனால் தற்போது அந்தப் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கங்குவா ஓபனிங் பாடலில் 1500 பேர் நடனம் ஆடவில்லை என்றும் மொத்தம் 200 நடன கலைஞர்கள் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் லியோவிலும் 2000 பேர் எல்லாம் ஆடவில்லை என்ற ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பாடல் ஷூட்டிங்கை முடித்திருக்கும் கங்குவா படக்குழு தற்போது கொடைக்கானல் சென்றிருக்கிறது. அங்கு மொத்தம் 10லிருந்து 15 நாட்கள்வரை ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











