Thangalaan - தங்கலான் ரிலீஸ் எப்போது?... லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Thangalaan (தங்கலான்) தங்கலான் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முகத்தை வெகுவாக மாற்றிய இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் தோல்வியை சந்தித்தது. பக்குவமான இயக்குநர் முகநூல் போஸ்ட்களை பார்த்து கதை எழுதியதுபோல் படம் இருந்ததாக ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும், துஷாரா ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரமும் கடும் விமர்சனத்தை சந்தித்தது.

தங்கலான்: நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு பிறகு விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்டோரை வைத்து தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். பா.இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் இந்தப் படம் கண்டிபாக கோலிவுட்டின் அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவும் அமைந்திருக்கிறது.
கதை என்ன?: கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயலை மையப்படுத்தி கமர்ஷியலாக வெளிவந்து சக்கைப்போடு போட்டது கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும். பா.இரஞ்சித்தும் அதே கேஜிஎஃப்பை தொட்டிருக்கிறார். ஆனால் 1870ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் கேஜிஎஃப்பில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பற்றி படமாக்கியிருக்கிறார் இரஞ்சித். இதனால் இது வேறு தளத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.
விலா எலும்பு முறிவு: இப்படிப்பட்ட சூழலில் தங்கலான் படத்தின் ஷூட்டிங் ரிகர்சலின்போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதற்கிடையே, தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப பா.இரஞ்சித் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
ஷூட்டிங்: இந்தச் சூழலில் விக்ரம் முழுவதுமாக காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் மதுரையில் ஷூட்டிங் நடந்துவருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதுவரை 116 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்திருப்பதாகவும் விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்து கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தங்கலான் படமானது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் படமானது இந்த வருடத்தின் இறுதியில் வெளியாவதாக இருந்தது. ஆனால் இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பை முடிக்க தாமதமானால் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











