Indian 2 - ஷூட்டிங்கை முடித்து கமல் எப்போதான் போவாரோ.. இந்தியன் 2வில் என்ன நடக்கிறது தெரியுமா?
சென்னை: Indian 2 (இந்தியன் 2) இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் ஹாசனை பார்த்து படக்குழு ரொம்பவே வருத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த ஒருவர், லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும்படி உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஷூட்டிங் நிறுத்தம்: அதனையடுத்து விறுவிறுப்பாக படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியபோது படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.
விக்ரம் கொடுத்த உற்சாகம்: இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட்டோடு நெருக்கம் ஏற்பட இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் முன் வந்தது. இதனால் இனி படத்துக்கு எந்த சிக்கலும் எழாது என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டது.

டேக் ஆஃப் ஆன இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்து. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து சென்னையிலும், சூரத்திலும் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது.
வசந்தபாலன்: இவற்றில் சூரத்தில் நடந்த ஷூட்டிங்கை ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வரும் வசந்தபாலன் இயக்கினார். விறுவிறுப்பாக நடந்த சூரத் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கமல் ஹாசனுக்கான போர்ஷனும் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் படும் கஷ்டம்: இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக கமல் ஹாசன் படும் கஷ்டம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, வயதான கதாபாத்திரத்திற்கான மேக்கப் போடுவதற்கு மொத்தம் நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும், அந்த மேக்கப் ஆறு மணி நேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அந்த மேக்கப் போட்டிருக்கும்போது கமல் ஹாசனால் திட உணவு சாப்பிட முடியாது என்றும் அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்கிறார் என்றும் பேச்சு எழுந்துள்ளது.மேலும், இந்தப் படத்துக்காக கமல் படும் கஷ்டத்தை பார்த்த படக்குழு இந்த வயதிலும் இப்படி உழைக்கிறாரே என்று ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறது என்றும் விரைவில் அவரது போர்ஷனை முடித்து அனுப்ப வேண்டும் என திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











