Lal Salaam - லால் சலாம் அப்டேட்.. ரஜினிகாந்த் தொடர்பான செம ஃபோட்டோவை ரிலீஸ் செய்த ஐஸ்வர்யா
சென்னை: Lal Salaam Update (லால் சலாம் அப்டேட்) லால் சலாம் தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
ஷூட்டிங் ஓவர்: மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. எனவே அதே வைபோடு லால் சலாம் படமும் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளை ஐஸ்வர்யா தொடங்கியிருக்கிறார்.
புதிய புகைப்படம்: இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஸ்டூடியோ ஒன்றுக்குள் இருக்கும் ஐஸ்வர்யா தன் எதிரில் இருக்கும் ஸ்க்ரீனில் லால் சலாம் டைட்டில் கார்டில் ரஜினிகாந்த் பெயர் வருவதை பார்ப்பதுபோல் அமர்ந்திருக்கிறது. அதில் குர் ஆனுக்கு மேலே ரஜினியின் பெயர் வருகிறது. இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த புகைப்படத்தோடு ஐஸ்வர்யா, "ஏற்கனவே இன்றூ (நேற்று) கிருஷ்ண ஜெயந்தி. அதைவிட சிறப்பான நாளாக மாறியபோது" என கேப்ஷனையும் போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











