Leo - தயாரிப்பாளரின் சொதப்பல்?.. லியோ ஆடியோ வெளியீட்டுக்கு எதிர்ப்பு கிளப்ப திட்டமா?.. பரபரக்கும் தகவல்
சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ ரிலீஸ்) லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். பீஸ்ட், வாரிசு படங்களின் விமர்சன ரீதியான தோல்வியால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயமாக அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. முதலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியிடப்பட்டது. அதனையடுத்து சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜுலை மாதம் அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
அப்டேட்டுகள்: லியோ படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி தெலுங்கு, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகின. அண்மையில் தமிழ் போஸ்டர் வெளியானது. அதில் சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக விஜய் பிடிப்பது போன்று இருந்தது. வரிசையாக வெளியாகும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இன்றுகூட லோகேஷ் கனகராஜ் மொபைல் ஃபோனில் லியோ பட போஸ்டரை பார்ப்பதுபோன்ற புகைப்படம் வெளியானது.
ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். ஏனெனில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி குட்டி கதை ஒன்றை கூறினார். அதை சிலர் விஜய்க்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்றனர். எனவே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யும் குட்டி கதை சொல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
எதிர்ப்பு கிளம்புமா?: இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது லியோ படத்திலிருந்து முதல் சிங்கிளான நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து மொத்தம் 1200 டான்ஸர்கள் நடனமாடினார்கள். ஆனால் அவர்களுக்கான சம்பளம் இன்னும் சரியா போகவில்லை என கூறப்படுகிறது.
எனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முதல்நாள் வரை காத்திருக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அப்படி வரவில்லையென்றால் ஆடியோ ரிலீஸின்போது நேரு ஸ்டேடியத்துக்கு வெளியே எதிர்ப்பு கோஷம் எழுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











