Vijayakanth - தனது உதவியாளருக்காக சுவர் ஏறி குதித்த விஜயகாந்த்.. யாருக்கும் அப்படி ஒரு குணம் இல்லை
சென்னை: நடிகர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த சூழலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். மேலும் அவரது நல்ல குணங்கள் குறித்தும் பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர் விஜயகாந்த். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளியவராகவே கடைசிவரைக்கும் வாழ்ந்தவர் அவர். அதனாலேயே தன்னை போல் எளியவர்கள் யாருமே கஷ்டப்படக்கூடாது என்பதில் கடைசிவரை தீர்க்கமாகவே இருந்தார். விஜயகாந்த்தின் அந்த குணம்தான் பட்டித்தொட்டியெங்கும் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது.

சாம்ராஜ்ஜியம்: விஜயகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டம் அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் கொடிக்கட்டி பறந்துகொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் உள்ளே நுழைந்து தனது திறமையாலும், அழகாலும் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.
கிராமத்து கிங்: விஜயகாந்த்தை பொறுத்தவரை கிராமத்து பகுதிகளில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர். ஏனெனில் அவரை பார்த்த ஒவ்வொரு கிராமத்துக்காரரும் அட நம்மளை மாதிரியே இருக்காரே ய்யா என்று பேசி அவரை தங்களுக்குள் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அதனால்தான் அவரது அரசியல் என் ட்ரியும் பலமாகவே இருந்தது. முக்கியமாக கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரும் ஆக்டிவ்வாக இருந்தபோதே அவர் அரசியலுக்கு நுழைந்தார்.
உதவிய விஜயகாந்த்: நடிகர் என்ற அடையாளத்தோடு இருந்தாலும் அந்த அடையாளத்தை தன் தலைக்கு ஏற்றிக்கொண்டதில்லை விஜயகாந்த். முக்கியமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதே உணவுதான் கடைநிலை ஊழியவரை வழங்கப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்து அதை செயல்படுத்தியவரும் அவரே. இந்த சூழலில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
உதவியாளருக்காக விஜயகாந்த்தின் செயல்: விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் நிலையில் அவர் பற்றிய ஒரு சம்பவத்தை இதில் பார்க்கலாம். அதாவது, ஒரு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு விஜயகாந்த் மற்றும் படத்தின் இயக்குநர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள். இரவு லேட் ஆகிவிட்டதால் விஜயகாந்த்தின் உதவியாளர் அலுவலகத்தின் கேட்டை பூட்டிவிட்டு தூங்கிவிட்டாராம்.
அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் உடன் வந்தவர்களிடம் இப்போ கேட்டை திறக்க சொன்னா பாவம் அவன் தூக்கம் கெட்டுப்போயிடும். அதனால் நான் சொல்றபடி செய்யுங்க என்று சொல்லிவிட்டு உடனடியாக சத்தமே வராமல் அலுவலக சுவரை தாண்டி குதித்தாராம். இதனை பார்த்த இயக்குநரும் விஜயகாந்த்தே இப்படி செஞ்சிட்டார் நாமும் செஞ்சுதான் ஆக வேண்டும் என முடிவெடுத்து சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.
உள்ளே சென்ற விஜயகாந்த் அப்போதும் உதவியாளரை எழுப்பாமல் இருக்கும் சாப்பாட்டை தானே போட்டு சாப்பிட்டுவிட்டு படுத்தாராம். விஜயகாந்த் இடத்தில் வேறு எந்த ஹீரோ இருந்திருந்தாலும் தன்னுடைய உதவியாளரை அந்த நடு சாமத்தில் எழுப்பியிருப்பார் என்பதுதான் நிதர்சனம். அப்படிப்பட்ட விஜயகாந்த் இப்போது உயிரோடு இல்லை. மிஸ் யூ விஜயகாந்த்..


Click it and Unblock the Notifications











