HBD Yogibabu - எல்லோரும் ஏன் கலாய்க்கிறாங்க.. கதறி அழுத தாய் - தேற்றிய யோகிபாபு
சென்னை: Happy Birthday Yogibabu (பிறந்தநாள் வாழ்த்துகள் யோகிபாபு) பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் 38ஆவது பிறந்தநாள் இன்று.
சின்னத்திரையில் லொள்ளு சபாவில் நடித்து பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் யோகிபாபு.

பன்னிமூஞ்சி வாயன்: யோகிபாபு இப்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றினார். அவர் பிரபலமானது யாமிருக்க பயமேன் படத்தின் மூலம்தான். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த பன்னி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் யோகிபாபு.
ஹீரோ யோகிபாபு: நகைச்சுவை நடிகராக வலம் வந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து தனது நடிப்பில் பட்டையை கிளப்பினார். படமும் மெகா ஹிட்டானது.
மண்டேலா : ஹீரோவாக முதல் பட வெற்றிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார் யோகிபாபு. வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட மண்டேலாவும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக படமான தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். மேலும் அவருக்கு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும் ரசிகர்களுக்கு மண்டேலா உணர்த்தியது.
மாவீரன், ஜெயிலர்: யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் மாவீரன் படம் வெளியானது. படமும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதேபோல் ரொம்ப நாட்களுக்கு பிறகு யோகிபாபுவின் காமெடி ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறினர். மாவீரன் மட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார் யோகிபாபு.

யோகிபாபு பிறந்தநாள்: இந்தச் சூழலில் யோகிபாபு இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து இதில் பார்க்கலாம்.
என்ன நடந்தது?: யாமிருக்க பயமேன் படம் ரிலீஸானதும் யோகிபாபு தனது தாயை அழைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படத்தில் அவரை எல்லோரும் பன்னி மூஞ்சி வாயன் என கலாய்க்கும் காட்சிகள் வந்திருக்கின்றன. அதைப் பார்த்த யோகிபாபுவின் தாயோ, நீ அழகாகத்தானே இருக்க. அப்புறம் ஏன் உன்னை எல்லோரும் பன்னி மூஞ்சி வாயன் என சொல்கிறார்கள் என கதறி அழுதிருக்கிறார்.
அதனையடுத்து அம்மா இதெல்லாம் சும்மா நகைச்சுவைக்காகத்தான் என கூறி தாயை சமாதானம் செய்திருக்கிறார் யோகிபாபு. இப்படி எல்லோராலும் கலாய்க்கப்பட்ட யோகிபாபுதான் இன்று தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். அவருக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











