கமலின் விக்ரம் படத்திலிருந்து விலகிய லாரன்ஸ்...காரணம் இது தானாம்
சென்னை : நடன இயக்குனராக இருந்து, நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ், பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் அவர் நடித்த 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' என அனைத்து படங்களும் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. இதனால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் பட்டியலில் லாரன்சும் இடம்பிடித்தள்ளார்.
கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லன் ரோலில் லாரன்ஸ் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு கடைசி நிமிடத்தில் லாரன்ஸ் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் விஷாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

விஜய் சேதுபதிக்கு வரவேற்பு
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தது போல், இந்த படத்திலும் அவரையே நடிக்க வைக்க டைரக்டர் லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்ததாக கூறப்பட்டது. விஜய்க்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

லாரன்சிற்கு பதில் ஃபகத் ஃபாசில்
தற்போது லாரன்சிற்கு பதிலாக 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை முடிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் 'விக்ரம்' படத்தில் தானும் இணைந்துள்ளதை ஃபகத் ஃபாசில் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் அவர் கமலுக்கு வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் விலகியது ஏன்
ஆனால் இந்த படத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் லாரன்ஸ் விலக என்ன காரணம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது கிடைத்த தகவலின்படி, ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்ற படங்களில் அவர் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் 'விக்ரம்' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. கதிரேசன் இயக்கும் 'ருத்ரன்' படத்தில் ஏற்கனவே லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தயாராகிறது சந்திரமுகி 2
அதே சமயம், பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் லாரன்ஸ் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் வேலைகள் இந்த ஆண்டு மே மாதம் முதல் துவங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கமலின் சொந்த தயாரிப்பு
அனிருத் இசையமைக்கும் 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரம்மாண்ட படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











