கட்டப்பாவுக்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்துக் கூறிய திரைப்பிரபலங்கள்!
சென்னை : தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் சத்யராஜ்.
தனித்துவமான நடிப்பு, நக்கலான பேச்சு என தனக்கே உரித்தான தனி பாவனைகளுடன் இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் "கட்டப்பா " கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பலருக்கும் பரிச்சயமான இந்த புரட்சி தமிழன் நடிகர் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிகரமான ஹீரோவாக
சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ் இந்திய அளவில் பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் வகையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அனைவராலும் பாராட்டப்படும் ஒப்பற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது
வில்லன், ஹீரோ, காமெடியன் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நக்கல் கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இவர் நடித்த பல திரைப்படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வசூலில் பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது.

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக
தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் ஹிந்தி என பழமொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு 1987 ஆம் ஆண்டு வெளியான "வேதம் புதிது" திரைப்படம் முதல் வெற்றித் திரைப்படமாக அமைய அதை தொடர்ந்து இவர் நடித்த நடிகன், அமைதிப்படை, கடலோர கவிதைகள், வால்டர் வெற்றிவேல் என பல படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஓடி இவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

நடிகன்
தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் மற்றும் காமெடியன்கள் இணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என சொல்லப்படும் நிலையில் சத்யராஜ், கவுண்டமணி இணையும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று வந்தது. நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன், ப்ரம்மா, பங்காளி, ரிக்ஸா மாமா என இவர்கள் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸை கலக்கியதோடு பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குனராக
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு வெளியான "வில்லாதி வில்லன்" திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சத்யராஜ் அதில் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் புதிய பரிமாணத்தை வழங்கி இருப்பார்.

"கட்டப்பா" கதாபாத்திரத்தில்
இவ்வாறு தமிழில் பல வெற்றித் திரைப் படங்களை கொடுத்த சத்யராஜ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் "கட்டப்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானதைத் தொடர்ந்து இப்பொழுது தெலுங்கு ரசிகர்களிடமும் மிகவும் பரிச்சயம் ஆகி உள்ளார்.

பிறந்த நாள்
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராக இன்றுவரை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பல திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











