மக்கள் நாயகன்... ராமராஜன் பட்டத்தைப் பிடுங்கி கார்த்திக்கு அளித்த தயாரிப்பாளர்!
சினிமாவில் பட்டப் பெயர் போட்டுக் கொள்வதிலிருந்து விதிவிலக்காக இருந்தவர்கள் சிவகுமாரின் பிள்ளைகளான சூர்யாவும் கார்த்தியும். சிவகுமாருக்கே கூட பட்டப் பெயர் இல்லை. ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் மட்டும் செந்தமிழ்ச் செல்வன் என்று போட்டார்கள்.
இப்போது கார்த்திக்கு மட்டும் பட்டப் பெயர் சூட்டிவிட்டார்கள். இனி அவர் வெறும் கார்த்தி அல்ல, மக்கள் நாயன் கார்த்திக்.
மெட்ராஸ் படத்தின் வெற்றி விழாவில் வைத்து இந்தப் பட்டத்தை அவருக்குச் சூட்டிவிட்டனர்.
கார்த்தி, கேத்ரின் திரேஷா ஜோடியாக நடித்த மெட்ராஸ் படம் வெளியாகி, நல்ல விமர்சனங்கள், வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் அந்தப் படம் வெளியான நேரம் பார்த்து ஜெயலலிதாவுக்கு தண்டனை என தீர்ப்பு வந்ததில் இரண்டு நாள் வசூல் அவுட்.

வெற்றி விழா
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தி நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது. அப்போது கார்த்திக்கு ‘மக்கள் நாயகன்' பட்டத்தை வழங்கினார்கள்.

மக்கள் நாயகன்
மெட்ராஸ் படத்தில் நடித்த ஜெயராவ் பேசும் போது, "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களோடு, மக்களாய் இருப்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் நாயகனாக திகழ்ந்தார். அவருக்கு பிறகு அதே போன்ற படங்களில் நடித்து மக்கள் நாயகன் பட்டத்துக்கு பொருத்தமானவராக கார்த்தி திகழ்கிறார்," என்றார்.

அரசியலா?
இதையடுத்து நிருபர்கள் கார்த்தியிடம் மக்கள் நாயகன் பட்டம் பெற்றுள்ளீர்கள். அரசியல் படத்திலும் நடித்து இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா என்று கேட்டனர்.

வம்பே வேணாம்
இதற்கு பதில் அளித்த கார்த்தி, "வம்பில் இழுத்து விடாதீர்கள். மெட்ராஸ் படம் அரசியல் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான், அந்த படத்தில் நடித்தேன். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை," என்றார்.

மக்கள் நாயகன் ராமராஜனாச்சே..
மக்கள் நாயகன் என்ற பட்டம் ராமராஜனுக்கு தரப்பட்டதாகும். அவர் புகழின் உச்சியில் இருந்த போதும், அதன் பிறகு அவர் நடித்த படங்களிலும் மக்கள் நாயகன் என்றுதான் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் அவர் பட்டத்தைப் பிடுங்கி கார்த்திக்கு கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











