பெரிய ஹீரோக்களை இளம் இயக்குநர்கள் காலி பண்றாங்களா? இல்லை பெரிய ஹீரோக்கள் தலையீடு படத்தை பாதிக்குதா?
சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் படங்களை கொடுத்த இயக்குநர் அஜித் குமாரை வைத்து படம் எடுக்கிறார் என்றதுமே ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நேர்கொண்ட பார்வை ஏதோ இந்தி பட ரீமேக் என அமைதி காத்த அஜித் ரசிகர்களை வலிமை படத்திலும் பெரிய அளவில் ஏமாற்றி விட்டார் எச். வினோத் என அவர் மீது பலரும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
அதே போன்ற ஒரு நிலைமை தான் தற்போது இயக்குநர் நெல்சனுக்கும் பீஸ்ட் படம் மூலம் கிடைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு கதை பண்ண இளம் இயக்குநர்களால் முடியவில்லையா? இல்லை அவர்களை கன்ட்ரோல் பண்ண முடியாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணமா என சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே கிளம்பி உள்ளது.

வலிமை சந்தித்த பிரச்சனை
பைக் ஸ்டன்ட்டுகள் உலகத் தரத்தில் எடுக்கப்பட்ட நிலையில், படத்தின் திரைக் கதையில் தேவையில்லாமல் வந்த அம்மா, தம்பி சென்டிமென்ட் தான் அந்த படத்தை சொதப்பியது என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. இயக்குநர் வினோத் சொதப்பி விட்டார் என்றும், நடிகர் அஜித்தின் தலையீடு தான் காரணம் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், எதிர்பார்த்த வசூலை வலிமை பெற்றதாக ட்வீட் போட்ட போனி கபூர் அடுத்த படத்தையும் வினோத் இயக்க பணம் போட்டுள்ளார்.

பாண்டிராஜுக்கு என்ன ஆச்சு
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், கமர்ஷியல் பிளஸ் சமூக கருத்து கொண்ட எதற்கும் துணிந்தவன் படத்தில் சீரியஸ் பிளஸ் காமெடி என மிக்ஸ் பண்ணி வைத்தது தான் எதற்கும் துணிந்தவன் பிரச்சனை எனக் கூறினார்கள். நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் சறுக்கி விட்டது என கலவையான விமர்சனங்கள் குவிந்தன.

நெல்சன் பண்ண தப்பு
நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என சின்ன பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து பெரிய பட்ஜெட்டில் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ள நிலையில், மூலக் கதை முதல் திரைக்கதை வரை பயங்கரமாக அடி வாங்கியுள்ளதே நெல்சன் பண்ண தப்பு என்ன என்றும் எங்கே பிரச்சனை நடக்கிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஹீரோக்களா? இயக்குநர்களா?
வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் என இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மூன்று நடிகர்களின் படங்கள் வெளியான நிலையிலும், மற்ற மாநில படங்களுடன் போட்டி போட்டு இதுதான் டாப் என காலரை தூக்கி சொல்லும் அளவுக்கு இல்லாத நிலைக்கு காரணம் இந்த 3 படங்களின் ஹீரோக்களா? அல்லது இயக்குநர்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெல்சன் பேட்டி
இயக்குநர்களை பெரிய நடிகர்கள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்கிற தொனியில் இயக்குநர் நெல்சன் அளித்திருந்த பேட்டி அப்போதே பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இயக்குநர்கள் விரும்பும் படத்தை எடுக்க வேண்டும் என்றால், சொந்த தயாரிப்பில் சின்ன ஹீரோவை வைத்து எடுத்தால் உண்டு என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், அதன் எதிரொலி தான் பீஸ்ட் படமா? என்கிற கேள்வியையும் கேட்க வைக்கிறது.

கம்ப்ளீட் பேக்கேஜ்
ஒரு கதைக்கு தேவையான விஷயங்கள் மட்டுமின்றி ஒரு கம்ப்ளீட் பேக்கேஜை முன்னணி நடிகர்கள் எதிர்பார்ப்பது தான் இது போன்ற சொதப்பல்கள் ஏற்பட காரணமா? என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதற்கு உரிய இயக்குநர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கினால் தான் சாத்தியம் ஆகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











