twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரட்டை வேடங்களின் நாயகர்கள்!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒரு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதுதான் ஒரு நடிகர் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவால். நட்சத்திர மதிப்பைப் பெறுவதற்கும், பெற்றிருக்கும் நட்சத்திர மதிப்பை உயர்த்திக்கொள்வதற்கும் அதுதான் மிகச் சரியான வாய்ப்பு. இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் அத்திரைப்படத்தின் வழியாக மக்களின் பேரன்பைப் பெற்றார்கள்.

    ஒரே நடிகரின் இருவகைக் குணப்பாங்குகள் ஒரே படத்தில் காட்டப்படுவதால் அவருடைய பல்வேறு திறன்களும் அடுத்தடுத்து வெளிப்படுகின்றன. திரைப்படம் முழுவதுமே அவ்விரண்டு வேடங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பார்வையாளர்களை இருமடங்கு வீச்சுடன் கட்டிப் போட்டுவிடலாம். இரட்டை வேடப் படங்கள் வெற்றி பெற்றால் அது மிதமான வெற்றியாக இருக்காது. வரலாற்றைப் புரட்டிப் போடும் வெற்றியாகவே அமையும். அண்மையில் வெற்றி பெற்ற பாகுபலிகூட இந்த வகைமைக்குள் வருவதுதான்.

    Heroes and double roles in Tamil Cinema

    இரட்டை வேடங்களில் நடித்து பெறற்கரிய வெற்றிக்கனிகளைப் பறித்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். அவர்கள் தொடக்கநிலைத் தடைகளை வென்று மக்களின் மனங்கவர்ந்த நட்சத்திரங்களாக மாறிய காலகட்டத்தில் இருவர்க்கும் பொருத்தமான இரட்டை வேடப் படங்கள் அமைந்தன. சிவாஜிக்கு உத்தமபுத்திரன். எம்.ஜி.ஆர்க்கு நாடோடி மன்னன். அவ்விரண்டு படங்களும் பெருவெற்றி பெற்றன.

    சிவாஜியின் உத்தமபுத்திரன் வீனஸ் பிக்சர்ஸ் என்னும் ஆலமரத்தின் தயாரிப்பு. ஆனால், நாடோடி மன்னன் என்னும் திரைப்படம் ஆயிரம் கடன்பத்திரக் கையெழுத்துகளுக்குப் பிறகு உருவான எம்.ஜி.ஆர். என்னும் தனி மனிதரின் பெருமுயற்சி. குடியாட்சி குறித்த கருத்தாடல்களை விதைத்த படங்கள் அவை. உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக்குப் பிறகு அவ்விரு நாயகர்களும் தமது நட்சத்திர மதிப்பில் அடுத்தடுத்த உயர்படிகளுக்குச் சென்றார்கள். இருவரும் பலப்பல இரட்டை வேடப் படங்களில் தொடர்ந்து நடித்துத் தத்தம் இரசிகர்களைத் தொடர்ந்து மகிழச் செய்தனர்.

    'நவராத்திரி' என்னும் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்ததை மலையைத் தூக்கிய முயற்சி என்றே சொல்ல வேண்டும். 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் இரட்டை வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்ததன் வழியாக எம்.ஜி.ஆர் ஈட்டிய மக்களன்புதான் அவருடைய அரசியல் வெற்றிகளுக்கும் அடிக்கல் நாட்டியது என்று துணிந்து சொல்லலாம்.

    அவர்களுடைய காலத்தில் பிற நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட இரட்டை வேடப் படங்கள் மிகக்குறைவு. எஸ்.எஸ். இராஜேந்திரன் தமது நட்சத்திர வாழ்வின் இறுதிக்காலத்தில் 'இரட்டை மனிதன்' என்ற படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவில்லை. நாயகர்கள் மட்டுமின்றி ஜெயலலிதா, லட்சுமி, வாணிஸ்ரீ போன்ற நாயகிகளும் இரட்டை வேடங்களில் நடித்தவர்கள்.

    ஒருவரின் திரைத்தோற்றத்தால் சலிப்பில்லாத உவப்பைப் பார்வையாளர்கள் பெறுகிறார்கள் என்றால்தான் அவர் நட்சத்திர மதிப்பை அடைய முடியும். ஒருவரைத் தொடர்ந்து திரையில் காணும் விருப்பத்தின் பசிநோய் பார்வையாளர்களுக்குப் பீடித்திருந்தால்தான் அந்நடிகரை இரட்டை வேடங்களில் ஏற்பார்கள். இதை உணர்ந்துகொண்டால்தான் இரட்டை வேடங்களில் நடித்த கலைஞர்களின் பெருமையை உணர முடியும்.

    எழுபதுகளின் இறுதியில் தகத்தகாய விண்மீன்களாய் ஆளானவர்கள் கமல்ஹாசனும் இரஜினிகாந்தும். பின்னவர் உருவாகி வந்தபோது முன்னவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். கமல்ஹாசன் இளைஞர்களின் கனவு நாயகனாகிவிட்ட பின்பும், நட்சத்திர மேன்மையை அடைந்துவிட்ட பின்பும், அருமையாக நடித்து ஆன்றோர்களின் பாராட்டுகளை ஈட்டிய பின்பும் 'இரட்டை வேடங்கள்' என்னும் பெருமலையைக் கடக்க வேண்டியிருந்தது. அந்தச் சிக்கலான நேரத்தில் அவர்க்கு அமைந்த படம் 'கல்யாணராமன்.' சட்டம் என் கையில் என்ற படமே அவருடைய முதல் இரட்டை வேடப்படம் என்றாலும் கல்யாணராமனை முன்னிறுத்துவதில் யார்க்கும் மறுப்பிராது.

    கல்யாணராமனில் மந்தபுத்தி உடைய கல்யாணமாகவும் கெட்டிக்கார இராமனாகவும் கமல்ஹாசன் திறம்பட நடித்தார். படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டியது. தமிழில் மிகுதியான இரட்டை வேடப் படங்களில் நடித்தவர் கமல்ஹாசனாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய படங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அம்முடிவுக்குத்தன வரவேண்டியிருக்கிறது. "சட்டம் என் கையில், கடல் மீன்கள், ஒரு கைதியின் டைரி, தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், இந்தியன், ஆளவந்தான், தசாவதாரம்" என்று கமல்ஹாசனின் பட்டியல் பெரிது. இவற்றில் சகலகலா வல்லவன் தொடங்கி விஸ்வரூபம் வரை அவர் நடித்த பற்பல படங்களில் இருவேடப் பண்புகள் அடங்கியிருப்பதையும் கணக்கில் கொள்ளலாம்.

    இரட்டை வேடங்களுக்கான முதல் அடிப்படை அப்பாத்திரங்களின் எதிரெதிர் குணவார்ப்புகள். ஒருவர் அப்பாவி என்றால் இன்னொருவர் கெட்டிக்காரர். ஒருவர் குடிமகனார் என்றால் இன்னொருவர் அரசர். ஒருவர் அடிவாங்குபவர் என்றால் இன்னொருவர் அடிகொடுப்பவர். ஒருவர் நல்லவர் என்றால் இன்னொருவர் கெட்டவர். ஒருவர் பயந்தாங்கொள்ளி என்றால் இன்னொருவர் வீரதீரர். எவ்வொரு இரட்டை வேடப் படங்களை எடுத்து ஆராய்ந்தாலும் இந்தத் தன்மை இருப்பதைக் காணலாம். இருவேறு நிலைமாந்தரிடையே ஒரு சூழல் எவ்வாறெல்லாம் இருவாறாக எதிர்கொள்ளப்படுகிறது என்ற முரணின்பத்தைத்தான் இரட்டை வேடங்களின் பார்வையாளர் பெறுகிறார்.

    இரஜினிகாந்துக்கு பில்லா என்ற திரைப்படம் இரட்டை வேடங்களைக் கொடுத்தது. பெருவெற்றி பெற்ற இந்திப் படமொன்றின் தமிழ்ப்பதிப்பு அது. இரஜினிகாந்த் தம் திறன்களையெல்லாம் பிழிந்தெடுத்து நடித்த படம் என்பதை அப்படத்தின் ஒவ்வொரு சுடுவிலும் காணலாம். அந்தப் படமும் இந்திக்கு நிகரான வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு 'நெற்றிக்கண், போக்கிரி ராஜா, மூன்று முகம், அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, அதிசயப் பிறவி, தர்மத்தின் தலைவன், சிவாஜி, எந்திரன்' என்று ஏராளமான படங்கள் அவர்க்கு இரட்டை வேடங்களாகவே அமைந்தன. அவருடைய திரைவாழ்வின் கொடுமுடியாய் அமைந்த படமான பாட்சாவிலும் ஏறத்தாழ இருவேறு குணப்பாங்குப் பாத்திரங்கள்தாம். தில்லுமுல்லு, தர்மதுரை போன்ற படங்களும் இரட்டை வேடப் படங்களுக்கு நிகரானவையே.

    இரட்டை வேடங்களில் இரு வேறுபட்ட குணப்பாங்குகளை வெளிப்படுத்துவதில் ஒரு நடிகர் தம் குரல்மொழியிலிருந்து உடல்மொழிவரை நுண்மையான வேறுபாட்டை மறவாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதில் சற்றே பிசகினாலும் இரட்டை அழிந்து ஒற்றைத் தன்மை வந்துவிடும். அத்தன்மையில் மேற்சொன்ன நால்வரும் வியக்கத்தக்க நடிப்பாற்றலோடு விளங்கினார்கள்.

    இவர்களுக்கு அடுத்த வரிசை நடிகர்களில் விஜயகாந்துக்குப் பெயர் சொல்லும்படியான இரட்டை வேடப் படங்கள் சில அமைந்தன. சத்யராஜும் சில படங்களில் இரட்டை வேடமிட்டார். இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பல நாயகர்களுக்கு அத்தகைய வேடங்கள் அமையவில்லை. இரட்டை வேடமாக அமையாமல் முதற்பகுதி ஒரு குணப்பாங்கோடும் பிற்பாதியில் வேறொரு குணப்பாங்கோடும் வருமாறு திரைக்கதையை அமைத்துக்கொண்டார்கள்.

    இன்று தொழில்நுட்பம் பெருவளர்ச்சி பெற்றிருக்கும் சூழலில் இரட்டை வேடங்களென்ன... பல்வேடங்கள் தரிப்பதும் எளிமையானதுதான். ஆனால், வெறும் படச்சுருளில் இருவேறு வகையாய் நடித்துப் பொருத்துவது அக்காலத்தில் அருவினையாக இருந்ததை மறுக்க முடியாது. பொறியியலின் துல்லிய அளவுகளோடு நின்றும் நடந்தும் நடித்தும் பேசியும் படமாக்கப்பட்ட படங்கள் அவை. புதியன விரும்பும் மனவேட்கையும் திரைக்கலையின் வாய்ப்புகளை மேலும் பற்றி விரிக்கத் தோன்றிய பேரார்வமுமே இரட்டை வேடப் படங்களை இங்கே ஆக்கியளித்தன. அம்முயற்சியில் தளராது தம்மை ஈடுபடுத்திக்கொண்ட நம் மூத்த கலைஞர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.

    English summary
    An article on heroes who done double roles in Tamil cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X