Director Siddique - மறக்குமா நெஞ்சம்.. தமிழ் ரசிகர்களின் நினைவிலிருந்து நீங்காத இயக்குநர் சித்திக்
திருவனந்தபுரம்: Director Siddique (இயக்குநர் சித்திக்) மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான இயக்குநராக இருந்த சித்திக் இன்று கொச்சியில் காலமானார்.
கேரள மாநிலம் கொச்சியில் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இஸ்மாயில் ஹாஜி, சைனபா தம்பதிக்கு பிறந்தார் சித்திக். அவரது முழு பெயர் சித்திக் இஸ்மாயில். களமசேரியில் இருக்கும் செயின்ட் பால் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். கொச்சி கலாபவன் ட்ரூப்பில் சித்திக் மற்றும் லால் ஆகியோரின் திறமையை பார்த்த பாசில் தன்னிடம் அவர்களை உதவி இயக்குநர்களாக சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து இரண்டு பேரும் பாசிலிடம் பல படங்களில் பணியாற்றினர்.

இரட்டையர்கள்: அதனையடுத்து சித்திக்கும் லாலும் இணைந்து கதையாசிரியர்களாக மாறினர். அதன்படி பாப்பன் ப்ரியபேட்டா பாப்பன் என்ற படத்துக்கு இருவரும் இணைந்து கதை எழுதினர். அதன் பிறகு ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இரண்டு பேரும் இயக்குநர்களாக அவதரித்தனர். அந்தப் படம் ஹிட்டடித்தை அடுத்து மலையாள தேசத்து தவிர்க்க முடியாத இரட்டையர்களாக ஜொலித்தனர்.தொடர்ந்து, 'காட்ஃபாதர், வியட்நாம் காலனி, ஹரிஹர் நகர், கபூலி வாலா உள்ளிட்ட படங்களை இணைந்து இயக்கினர்.
தனியாள் சித்திக்: அதனையடுத்து சித்திக் தனியாக படம் இயக்க முடிவெடுத்து ஹிட்லர் என்ற படத்தை இயக்கினார். அதில் மம்மூட்டி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 1996ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து தனியாகவே படங்களை இயக்க ஆரம்பித்தார் சித்திக். அவர் இயக்கிய ப்ரெண்ட்ஸ், க்ரோனிக் பேச்சிலர் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
இதில் ப்ரெண்ட்ஸ் படத்தை லால் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சித்திக் கடந்த 1984ஆம் ஆண்டு சஜிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சுமயா, சரா, சுகூன் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
தமிழில் சித்திக்: மலையாள ப்ரெண்ட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். விஜய் , சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்த் அதே பெயரில் தமிழிலும் ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. குறிப்பாக 'ல் தா க சை ஆ'என்ற வசனம் அப்போது வெகு பிரபலம். அதேபோல் வடிவேலுவுக்கு நேசமணி என்ற கேரக்டரை கொடுத்து காமெடியில் அட்டகாசம் செய்தார்.
வடிவேலு, சித்திக் காம்போ: ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு, சித்திக் காம்போ பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. இதனையடுத்து தமிழில் அவர் இயக்கிய எங்கள் அண்ணா படத்திலும் வடிவேலுவுக்கு காமெடி ரோல் கொடுத்தார். வடிவேலுவின் கரியரிலேயே ப்ரெண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா படத்தின் காமெடிகள் காலத்துக்கும் அழியாதவை. இன்றுவரை சித்திக்கிற்கும் தமிழில் அதுதான் அடையாளமாக இருக்கிறது.
ஆணியே புடுங்க வேண்டாம்: ப்ரெண்ட்ஸ் படத்தில் நீ ஆணியே புடுங்க வேண்டாம், தரைய தொடடா, வெளிய போங்கடா அப்ரசெண்டிகளா உள்ளிட்ட காமெடிகளும் எங்கள் அண்ணாவில் பட்டாசு காமெடி உள்ளிட்ட காட்சிகளும் இப்போது இல்லை எப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைப்பவை. வடிவேலுவேக்கூட ஒரு பேட்டியில், காமெடி சீனை டெவலப் செய்வதற்கு சித்திக் முழு சுதந்திரம் கொடுப்பார் என சிலாகித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு கம்பேக்: காமெடி படங்கள் எடுப்பதில் மட்டும் தான் வல்லவன் இல்லை காதல் சப்ஜெக்ட்டிலும் தான் கில்லிதான் என்பதை சித்திக் பாடிகார்ட் படத்ஹ்டின் மூலம் நிரூபித்தார். அந்தப் படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. அதை காவலன் என்ற பெயரில் விஜய்யை வைத்து இயக்கினார். அந்தப் படம்தான் விஜய்யின் சோதனைக் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் இப்படி நடிப்பதை பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது என்று திரையரங்குகளில் எமோஷனல் ஆன சம்பவம் எல்லாம் அரங்கேறியது. சித்திக் தமிழில் கடைசியாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை அரவிந்த் சாமியை வைத்து இயக்கினார்.
மறக்குமா நெஞ்சம்: இப்படி தமிழில் மறக்க முடியாத படங்களை கொடுத்த சித்திக் தனது 69ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொச்சி அமிர்தா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மறக்குமா நெஞ்சம் என சித்திக்கின் படங்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
1991ஆம் ஆண்டு வெளியான காட் ஃபாதர் படத்துகாக சித்திக்கிற்கு கேரள அரசின் சிறந்த இயக்குநர் விருதும், 2012ஆம் ஆண்டு ஹிந்தியில் பாடிகார்ட் படத்தை இயக்கியதற்காக ஜீ சினிமாவின் சிறந்த அறிமுக இயக்குநர் விருதும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











