Parasakthi: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ‘பராசக்தி’.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா, ரவிமோகன் ஆகியோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் 'டான் பிச்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த இப்படத்திற்கு எதிரான இந்தத் தீர்ப்பு படக்குழுவினருக்கு நிம்மதியளித்துள்ளது.
இப்படத்தின் கதை தனது 'செம்மொழி' எனும் கதை திருடப்பட்டது என இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு மொழிப்போரை மையமாகக் கொண்டு, தான் எழுதிய இந்தக் கதையை 2010ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பதிவு செய்யப்பட்ட அந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் அளித்ததாகவும், அதன் மூலம் தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அங்கிருந்து இயக்குநர் சுதா கொங்கராவைச் சென்றடைந்ததாகவும் ராஜேந்திரன் விளக்கினார். 'புறநானூறு' என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருந்த படம் தனது 'செம்மொழி' கதைதான் என்றும், கைவிடப்பட்ட அத்திட்டம் தற்போது 'பராசக்தி'யாக மீளுருவாக்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
தனது கதை திருடப்பட்டு 'பராசக்தி' எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ராஜேந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதனால், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; மேலும், இரு கதைகளையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'பராசக்தி', 'செம்மொழி' ஆகிய கதைகள் ஒன்றுதானா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, பட இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது, 'செம்மொழி' கதையை 'பராசக்தி' படக்குழு திருடியதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், தடை விதித்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்றும் வலுவான வாதங்களை முன்வைத்தார்கள்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'பராசக்தி' படம் உருவாவது குறித்து ராஜேந்திரனுக்கு 2024ஆம் ஆண்டே தகவல் தெரிந்திருந்தும், 2025 டிசம்பரில்தான் மனு தாக்கல் செய்திருக்கிறார் எனச் சுட்டிக்காட்டினார். போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், உரிய காலத்தில் மனு தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்ததாலும், படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக் கூறி, ராஜேந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
எனினும், 'பராசக்தி' மற்றும் 'செம்மொழி' கதைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்ட நிலையில், அந்த உத்தரவை சங்கம் இதுவரை முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, மூடி முத்திரையிடப்பட்ட முறையில் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











