தி கேரளா ஸ்டோரி 2ம் பாகத்திற்கு தடை? வெளியான அதிரடி உயர் நீதிமன்ற உத்தரவு!
திருவனந்தபுரம்: தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் நீதிமன்றத்தில் வழக்கு சென்ற நிலையில், கடைசி வரை சுற்றிவிடப்பட்ட நிலையில், வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு படத்தை தேர்தலுக்கு பிறகு வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், கேரளா ஸ்டோரி 2 படத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்த நிலையிலும், தணிக்கை வாரியம் தாராளமாக சென்சார் வழங்கியது. ஆனால், நீதிமன்றத்தில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் டீசர் பொதுமக்களிடையே சலசலப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில், படத்தின் வெளியீடு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் தாக்கல் செய்த ஒரு வழக்கில், கேரளா மக்கள் ஒற்றுமையாக வாழும் நிலையில், இத்திரைப்படம் கேரளாவின் மதச்சார்பற்ற மாண்பை சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கேரளா ஸ்டோரி 2வுக்கு U/A சான்றிதழ்: விசாரணையின்போது, நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் வழங்கிய U/A சான்றிதழ், அதன் உணர்வுப்பூர்வமான கருப்பொருளுக்குப் பொருத்தமானதா என கேள்வி எழுப்பிய அவர், 'ஏ' சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கலைப்படைப்புகளில் பொதுவாகத் தலையிடுவதில்லை என்றாலும், படத்தின் தலைப்பில் 'கேரளா' என இருப்பதால் இதில் கவனம் செலுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சென்சார் போர்டு பலே விளக்கம்: படத்திற்கு சான்றிதழ் வழங்கியதற்கு சென்சார் வாரியம் விளக்கமளித்தது. 'கோவா கோன்', 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை', 'டெல்லி பெல்லி' போன்ற படங்களில் மாநில/நகரப் பெயர்கள் தலைப்புகளில் பயன்படுத்தப்பட்ட போதும் பிரச்சனை உருவாகவில்லை என்று வாதிட்டனர். ஆனால், மேற்குறிப்பிட்ட படங்களை விட, இந்த திரைப்படம் மத உணர்வுகளை அதிக அளவில் தொடுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
ரிலீஸுக்கு தடை: "கேரளாவில் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக மனுதாரர் கூறியிருக்கிறார். அதில் முகாந்திரம் இருப்பதாகவே தெரிகிறது" என்று நீதிபதி தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார். இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, இது பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் வாதிட்டார்.
எனினும், இந்த வாதங்களை ஏற்காத நீதிபதி, படத்தின் வெளியீட்டு உரிமைகளை மாற்றவோ அல்லது விற்கவோ கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் காரணமாக, 'தி கேரளா ஸ்டோரி' இரண்டாம் பாகத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











