சூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் குட்டி ஸ்டார்ஸ்..
சென்னை: சமீபகாலமாக குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டி வருகிறார்கள். அனுபவம் வாய்ந்த நடிகர்களையே விஞ்சும் அளவுக்கு அவர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது.
இப்போதெல்லாம் படங்களில், குழந்தை நட்சத்திரங்களின் மேனரிஸத்தையே, கதாநாயகர்களும் பின்பற்றுமாறு இயக்குநர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரம்ப காலங்களில்,கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, அஞ்சு ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்தார்கள்.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் மீனா, ஷாம்லி மற்றும் ஷாலினியைத் தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்கவில்லை.

கதை..கதையாம் காரணமாம்...
குழந்தைகளுக்கான படமும், குழந்தைகளை மையப்படுத்தும் படங்களும் குறைந்து விட்டதே இதற்கு காரணம்

குட்டீஸ் பங்கு அதிகம்தான்...
குழந்தை நட்சத்திரம் என்று தனித்து தெரியாவிட்டாலும் அவ்வப்போது வரும் படங்களில் குழந்தை நட்சத்திரங்களின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. அவர்கள் அந்தப் படத்தோடும், கதாபாத்திரத்தோடும் காணாமல் போய்விடுகிறார்கள். அடுத்த படங்களில் அவர்களை காண முடியவில்லை.

காணாமல் போனவர்கள்....
‘பசங்க' படத்தில் தேசிய விருது பெற்ற கிஷோர், ஸ்ரீராம், ‘நந்தலாலா'வில் நடித்த அஷ்வத் ராம் ஆகியோர் அதன் பிறகு பெரிதாக வலம் வரவில்லை என்பதே நல்ல உதாரணம்.

மிரட்டும் நடிப்பு...
குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டி வருகிறார்கள் என்பதற்கு உதாரணங்கள் பலப்பல....

நிலாவை மறக்கமுடியுமா?
‘தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த சாராவின் முகமும் நடிப்பும் அவள் சைகையால் தந்தை விக்ரமுடன் பேசும் அழகும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவை. பார்த்தவர்கள் கண்ணில் கண்ணீர் வழிந்தது அக்காட்சிகளில்...

சூப்பர் டோனி...
‘டோனி' படத்தில் நடித்த ஆகாஷ் ஒவ்வொரு வீட்டிலும் வளரும் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட சிறுவனை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

சபாஷ் சிறுமி...
‘உச்சிதனை முகர்ந்தால்' படத்தில் அறிமுகமான நீநிகா, இலங்கையில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சிறுமியாக வாழ்ந்தே காட்டினாள்.

சீறிப்பாய்ந்த பிருத்வி...
‘ஹரிதாஸ்‘ படத்தில் ஆடிசம் பாதித்த சிறுவனாக நடித்திருக்கும் பிருத்விராஜ் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறான். கையை ஆட்டியபடி ஒரு பக்கம் தலையை சாய்த்து அனைவரின் அனுதாபங்களையும் அள்ளி கண்ணீரை வரவழைத்தவன் .

மிரட்டும் சாதனா...
‘கற்றது தமிழ்' ராமின் ‘தங்க மீன்கள்' படம் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்கிறது. இதில் சாதனாவின் நடிப்பு டிரைலரிலேயே மிரட்டலாக இருக்கிறது.

மறையும் நட்சத்திரங்கள்....
இவர்களில் சாரா தவிர மற்ற யாரும் அடுத்த படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளுக்கு பத்து நாள் முதல் ஒரு மாதம் வரை விடுமுறை எடுத்தும் குழந்தைகளை நடிக்க வைப்பதால், குழந்தை நட்சத்திரம் என்ற ஒரு தனி அடையாளம் மறைந்து வருவதும் மறுக்க இயலாதது.

வானில் பல நட்சத்திரம்...
முன்பு குழந்தை நட்சத்திரம் என்று யாராவது ஒருவர் இருந்து கொண்டே இருந்தார். அதனால் குழந்தை கேரக்டருக்கு அவரைத் தேடிப் போனார்கள். இப்போ அப்படியில்லை. கதைக்குத் தேவையான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு நடிக்க வைக்கப்படுகிறார்கள். அடுத்த படத்துக்கு அடுத்த குழந்தையை தேடிப்போகிறார்கள்.

சின்னத்திரை ஸ்டார்கள்...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு நிறைய மேடைகளை அமைத்து தருவதால் அவர்களும் கூச்சமின்றி நடிக்க வந்து விடுகிறார்கள். பொதுவாக குழந்தை நட்சத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது விளம்பரங்களில்தான்.

வியாபாரச் சந்தையில் குழந்தைகள்....
'இன்றைய சந்தை வியாபாரத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் பொருட்களை வாங்க வைக்கப் பயன்படுபவர்கள். பெண்களின் வற்புறுத்தலும், குழந்தைகளின் அன்புமே பொருளை வாங்க வைக்கிறது. அதனால்தான் விளம்பர படங்களில் குழந்தைகள் அதிகம் நடிக்க வைக்கப்படுகிறார்கள்' என்கிறார் ஒரு விளம்பரபட ஏஜென்சியின் நிர்வாகி.


Click it and Unblock the Notifications











