கமல்ஹாசன் பட தயாரிப்பாளருக்கு கொரோனா.. அனுமதி மறுத்த மருத்துவமனைகள்.. திடீர் மரணத்தால் அதிர்ச்சி!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர் மரணமடைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு
தற்போது வரை 2.35 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில், இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா 6 வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 6,642 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மிக மோசமான பாதிப்புக்குள்ளான பட்டியலில் இந்தியா 12 வது நாடாக இருக்கிறது.

பாலிவுட் தயாரிப்பாளர்
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் தயாரிப்பாளர் அனில் சுரி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 77. 'கடந்த 2 ஆம் தேதி திடீரென்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரண காய்ச்சல் போல்தான் தெரிந்தது. மறுநாள் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மூச்சுவிட முடியவில்லை. இதனால், மும்பையில் உள்ள லீலாவதி, இந்துஜா மருத்துவமனைகளுக்கு அவரை அழைத்துச் சென்றோம்.

அனுமதி மறுப்பு
ஆனால், அந்த மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன. பிறகு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட்19 இருப்பது உறுதியானது. இதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயிரிழந்தார்
ஆனாலும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்து விட்டார்' என்று அனில் சுரியின் சகோதரரும் தயாரிப்பாளருமான ராஜீவ் சுரி தெரிவித்துள்ளார். ராஜீவ் சுரி, அமிதாப்பச்சன் நடித்த மன்ஸில் என்ற படத்தை தயாரித்தவர். அனில் சுரியின் இறுதிச் சடங்கு நேற்று காலை மும்பை ஓஷிவாராவில் நடந்துள்ளது. இதில் குடும்பத்தினர் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.
Recommended Video

நடிகர் கமல்ஹாசன்
அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த அனில் சுரி, ராஜ்குமார் -ரேகா ஜோடியாக நடித்த கர்மயோகி, ராஜ்குமார், சுனில் தத், கமல்ஹாசன், ஹேமமாலினி நடித்த 'ராஜ் திலக்', ராஜேஷ் கன்னா, ஜீதேந்திரா நடித்த பெகுனாஸ் உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











