நாய்களுடன் கெளதம் மேனன் வீடு முன் போராட்டம்!

கவுதம் மேனன் புதிதாக இயக்கி வெளியிட்டுள்ள படம் நடுநிசி நாய்கள். இந்தப் படம் ஆபாசமாகவும், வக்கிரமாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து இந்தப் படத்தை எடுத்த கவுதம் மேனனைக் கண்டித்து புதிய போராட்டத்தை அறிவித்துள்ளது, இத்தகைய போராட்டங்களை அறிவிப்பதில் சமீபகாலமாக பிரபலமடைந்து வரும் இந்து மக்கள் கட்சி.
அதில், "அருவருப்பையும் வக்கிரத்தையும் பகிரங்கமாக படமெடுத்து விட்டிருக்கிறார் கவுதம் மேனன். இதன் மூலம் இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.
வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.
எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது. இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இனி அவர் இந்த மாதிரி படமே எடுக்கக் கூடாது.
இந்தப் படத்தையும் கவுதம் மேனனையும் கண்டித்து, அவர் வீட்டு முன் நாய்களுடன் நள்ளிரவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் நள்ளிரவுப் போராட்டத்துக்கு அனுமதி இல்லாததால், பகலில் நாய்களுடன் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம்", என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











