இனிமே டாக்டர் ஹிப் ஹாப் தமிழா... இந்தியாவில் இதுவே முதன்முறை... கெத்து காட்டிய ஆதி!
சென்னை: கிளப்ல மப்புல என்ற ராப் பாடல் மூலம் பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
தொடர்ந்து இண்டிபென்டண்ட் மியூசிக் ஆல்பங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஹிப் ஹாப் தமிழா திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
அதேபோல் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உட்பட சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியளவில் முதன்முறையாக இசையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ஹிப் ஹாப் தமிழா.

ராப் இசைக் கலைஞன்
2000ம் ஆண்டுக்குப் பிறகு இசையுலகில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக ஏராளமான இண்டிபென்டண்ட் இசைக் கலைஞர்கள் மக்களிடம் பிரபலமாகினர். அவர்களில் ஒருவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. 'கிளப்புல மப்புல' என்ற ராப் பாடல் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் தமிழா, தொடர்ந்து திங்க் மியூசிக், சோனி மியூசிக், சரிகமா, டிசீரிஸ் போன்ற முன்னணி இசை நிறுவனங்களுக்கு சுயாதீனப் பாடல்களை உருவாக்கினார்.

சினிமாவில் அசத்தல்
மியூசிக் ஆல்பங்களில் கிடைத்த வரவேற்பால் திரையுலகிலும் எளிதாக தனது பயணத்தை தொடங்கினார். முக்கியமாக தனி ஒருவன், ஆம்பள, கலகலப்பு 2, கோமாளி, அரண்மனை 2, மிஸ்டர் லோக்கல் என பல படங்களுக்கு இசையமைத்தார். தனி ஒருவன் படத்தின் பின்னணி இசையில் மிரட்டியிருந்தார் ஹிப் ஹாப் ஆதி. அதேபோல், இன்னொரு பக்கம் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

டாக்டர் ஹிப் ஹாப் ஆதி
சிங்கர், மியூசிக் டைரக்டர், ஹீரோ என கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா, ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் ரொம்பவே பிரபலமானார். 2017ம் ஆண்டு நடந்த இப்போராட்டத்தில் மாணவர்களுடன் கலந்துகொண்டிருந்தார். அதேபோல் அந்நேரம் 'டக்கரு டக்கரு' என்ற ஜல்லிக்கட்டுப் பாடலையும் வெளியிட்டு அதிரடிக் காட்டினார். இந்நிலையில், Ph.D முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ஹிப் ஹாப் தமிழா.

இந்தியாவில் முதல்முறை
இதுகுறித்து தெரிவித்துள்ள ஹிப் ஹாப் தமிழா, "ஒரு மகிழ்ச்சியான விசயம் Ph.D முடித்துள்ளேன். இனிமேல் நான் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா; ஆனால், இது படித்து வாங்கிய டாக்டர் பட்டம். Music Entrepreneurship என்ற பிரிவில் Ph.D படித்து இந்த டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். தான் அறிந்த வரையில் இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து Ph.D பெறுவது இந்தியாவில் இதுவே முதன்முறை" என பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் ஹிப் ஹாப் தமிழாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











