இதே ஹோலி நாளில்… சூப்பர் ஸ்டார் என்ட்ரியான சுவாரசியக்கதை!
சென்னை : சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், இந்த பாடல் வெளிவந்தே பல ஆண்டுகள் கடந்து விட்டபோதும், இன்றைய 2k கிட்ஸ்களும் அவருடைய பெயரை உச்சரித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் பற்றி எழுத இன்றைக்கு என்ன ஸ்பெஷல் என்று நீங்கள், கேட்பது சரிதான். இன்று ஹோலி பண்டிகை இந்த பண்டிகை சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப ஸ்பெஷலான நாள்.
அப்படி என்ன ஸ்பெஷல், என்ன சுவாரசியம் என்று பார்க்கலாமா?

சிவாஜி ராவ் கெய்க்வாட்
பெங்களுரில் 1950 ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். 9 வயதில் தாயை இழந்த சிவாஜி, மடப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை முடித்தார். தந்தையின் ஓய்வுக்கு பிறகு குடும்பத்தின் வறுமை காரணமாக கிடைத்த வேலைகளை செய்து வந்த சிவாஜி, பின்னர் பெங்களூரு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராகப் பணியில் சேர்ந்தார்.

ரஜினிகாந்த் ஆனார்
1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கதவை திறந்துகொண்டு ஒரு சூறாவளி வீசியது. அந்த சூறாவளிக்கு இதே போன்ற ஒரு ஹோலி பண்டிகை நாளில் தான் ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கப்பட்டது. 1975ம் ஆண்டு ஹோலி விழாவில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பஸ் கண்டக்டர் 'ரஜினிகாந்த்' ஆனார்.

மூன்றில் ஒன்று
கே. பாலச்சந்தர் ரஜினியை திரையில் அறிமுகப்படுத்த புதிய பெயரை தேடிக்கொண்டு இருந்தார். அப்போது ரஜினிகாந்த், சந்திரகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த் என்று பெயரை கூற இதில் எந்த பெயரை வைக்கலாம் என்று விவாதித்துள்ளனர். அப்போது தயாரிப்பாளரிடம் பெயரை தேர்வுசெய்ய சொன்ன போது அவர் ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வுசெய்தார்.

நினைவுகளை நெஞ்சில்
இதனால் தான், ஹோலி பண்டிகை ரஜினிக்கு மிகவும் பிடித்தமான நாளாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பாலச்சந்தர் எங்கிருந்தாலும் அவரிடம் தவறாமல் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார் ரஜினிகாந்த். இன்று பாலச்சந்தர் இல்லை என்றாலும் அவரின் நினைவுகளை நிச்சயமாக நெஞ்சில் வைத்திருப்பார்.


Click it and Unblock the Notifications











