ஹாலிவுட் படத்துடன் சேர்த்து தமிழ் படத்தையும் இயக்கிய நந்தா... குறுக்கு வழி படத்தின் பர்ஸ்ட் லுக்!
சென்னை : புதுமையான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் குறுக்கு வழி.
இந்தப் படத்தை என்டி நந்தா எழுதி இயக்கியுள்ளார். மேலும் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார்.
இவர் முன்னதாக ஹாலிவுட் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ளது.

குறுக்கு வழி படம்
கடந்த 2017ல் வெளியான வல்ல தேசம் தமிழ்ப்படத்தை இயக்கியவர் என்டி நந்தா. இவர் எழுதி இயக்கியுள்ள படம் குறுக்குவழி. புதுமையான ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. கே சிங் மற்றும் ஏ ஷர்மா இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

முக்கிய பாத்திரத்தில் சினேகன்
படத்தில் துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க், மிப்பு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களை எழுதியுள்ள சினேகன், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட் இயக்குநர்
இதுகுறித்து இயக்குநர் நந்தா கூறுகையில், வல்ல தேசம் தமிழ் படத்திற்கு பிறகு தான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளதாகவும் படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ளதாகவும் தெரிவத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சர்வதேச தரம்
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் குறுக்குவழி படத்தை எழுதி இயக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சர்வதேச தரத்திற்கு இணையான தொழில்நுட்ப மற்றும் கதை அம்சங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்
படத்தை சிறிய பட்ஜெட்டில் உருவாக்கியிருந்தாலும் சிறந்த தொழில் நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, படத்தில் நடித்துள்ள சினேகன், லண்டனில் உள்ள நந்தா, தமிழில் சிறப்பான படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடனாக நடிகர் துருவா
படத்தில் நடித்துள்ள துருவா, படம் நான்கு திருடர்களை பற்றிய படம் என்றும் அதில் தான் ஒரு திருடனாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் புதிய அனுபவத்தை தனக்கு தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த தியேட்டர் அனுபவத்தை தரும்
இந்தப் படம் நல்ல தியேட்டர் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று படத்தின் மற்றொரு நடிகர் பிரனய் தெரிவித்துள்ளார். இந்தப் படம் தனிப்பட்ட முறையில் தனது மனதிற்கு நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் தனது கதாபாத்திரம் மிகுந்த அழுத்தம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரம்மாண்ட படங்களை தயாரிக்க திட்டம்
தயாரிப்பாளர்கள் கே சிங் மற்றும் ஏ ஷர்மா இருவரும் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் படம் தங்களது முதல் படி என்றும் விரைவில் தமிழில் பிரம்மாண்டமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


Click it and Unblock the Notifications











