பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.. குடும்பஸ்தன் படத்தின் வெற்றிக்கு என்ன காரணம்.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: பொங்கலுக்கு வெளியான படங்களில் ரசிகர்களை அதிகம் சிரிக்க வைத்த மத கஜ ராஜா திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வசூலை கடந்த வாரம் வெளியான படங்களிலேயே குறைத்து வரும் படமென்றால் அது மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் தான்.
நக்கலைட்ஸ் டீமை சேர்ந்த ராஜேஷ்வர் காளிச்சாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், சான்வி மேக்னா நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 4 நாட்களில் 8.7 கோடி ரூபாய் வசூலை கடந்து 10 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

திங்கட்கிழமையான நேற்று கடந்த வாரம் வெளியான எந்தவொரு படத்துக்கும் கூட்டம் இல்லாத நிலையில், குடும்பஸ்தன் படத்துக்கு மட்டுமே கணிசமான மக்கள் கூட்டம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இந்த படம் மக்களை கவர்வதற்கு முக்கிய காரணமே குரு சோமசுந்தரத்தின் சிரிப்பு தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே: அது எப்படி பாஸ் படத்தின் வெற்றிக்கு குரு சோமசுந்தரத்தின் சிரிப்பு காரணமாகும் என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. "சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்கிற எம்ஜிஆர் பாடல் போலத்தான் இந்த படத்தின் மையக் கதை அமைந்திருக்கிறது. சிரிப்பு என்பது அவ்வளவு அழகானது. ஆனால், அதே சிரிப்பை நக்கலாகவும், பிறரை புண்படுத்தும் விதத்தில் சிரித்தால் அதுவே பயங்கரமான வடுவை உண்டாக்கும் ஆயுதமாக மாறிவிடும். அந்த ஒரு விஷயம் தான் படத்தை பார்க்கும் பலரையும் கனெக்ட் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யானை வரும் பின்னே: "யானை வரும் பின்னே.. மணியோசை வரும் முன்னே" என்பது போல படத்தில் நாயகன் மணிகண்டனை வில்லனாக பார்க்கும் அவரது மாமா கதாபாத்திரமான குரு சோமசுந்தரத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே அவரது நமட்டுச் சிரிப்பு மணிகண்டனின் தூக்கத்தையே கெடுப்பதாக காட்டிய விதமே தியேட்டரில் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படம் முழுக்க அவர் மணிகண்டனை பார்த்து அந்த சிரிப்பை சிரிக்கும் இடங்களில் எல்லாம் காமெடி காட்சிகள் பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.
சொந்தக்காரர்களின் சிரிப்பு: ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு கடனை வாங்கி செய்ய வேண்டியதை பெருமைக்காக செய்பவர்களை நோகடிக்கும் விதமாக நக்கல் செய்து சிரிக்கும் சொந்தக்காரர்களின் சிரிப்பு தான் இந்த படத்தின் மெயின் வில்லனே. ஹீரோவான மணிகண்டனும் நல்லவன் என்றெல்லாம் காட்டாமல் அவரும் தனக்கு சான்ஸ் கிடைக்கும் போது அவரது அக்கா புருஷனை 60ம் கல்யாணத்தில் வச்சு செய்வதும் அதற்கு அவர் பதிலடி கொடுப்பதும் என முதல் பாதி முழுவதுமே படம் சரவெடியாக போனதால் தான் படத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











