ஆறே மாதங்களில் பிரமாண்ட லிங்கா உருவானது எப்படி? - ரஜினி சொன்ன தகவல்கள்
சென்னை: 3 ஆண்டுகளில் எடுக்க வேண்டிய பிரமாண்ட படமான லிங்காவை, ஆறே மாதங்களில் முடித்தது எப்படி என்ற தகவல்களை ரஜினி நேற்று வெளியிட்டார்.
லிங்கா ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதன் அடுத்த பகுதி:
படம் ஆரம்பிக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா அதை வெற்றிப் படமா கொடுக்கணுமில்ல. அதை ரசிகர்களுக்குப் பிடிச்ச மாதிரி கொடுக்கணுமில்ல, எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யணுமில்ல... அது எவ்வளவு கஷ்டமான விஷயம்?
அப்போதான் லிங்கா கதையை கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர் பொன் குமரன் சொன்னார். கேட்ட உடனே எனக்குப் பிடிச்சுப் போச்சி. இந்தப் படத்தை டைரக்ட் பண்றது யாருன்னு யோசிச்சேன். படையப்பா முடிஞ்சி நாலு வருஷம் கேப் விழுந்துடுச்சி. அதுக்கப்புறம் சந்திரமுகி வந்து ரெண்டு வருஷம் கேப் விழுந்துச்சி. அப்புறம் சிவாஜி ஒன்றரை வருஷம். எந்திரன் ரெண்டரை வருஷம் ஆச்சு. கோச்சடையான் நாலரை வருஷம்...

அதுக்கப்புறம் இப்போ இந்தப் படத்தைப் பண்ணனும்னா 3 வருஷமாவது ஆகும். ஆனா அப்படி இல்லாம, இந்தப் படத்தை ஆறே மாசத்துல முடிச்சி வெளியிடணும்னு முடிவு பண்ணேன். அதுவும் இந்த வருஷமே ரிலீஸ் ஆகணும். அப்படி ஒரு ஆள் யாருன்னு யோசிச்சப்ப என் மனசில் நின்னவர் ஒன் அன்ட் ஒன்லி கேஎஸ் ரவிக்குமார்தான். இதை ஷங்கர் சாரே ஒப்புக்குவார்.
உடனே ரவிக்குமாரை அழைச்சேன். "சரி, நான் இந்தப் படத்தைப் பண்றேன். ஆனா ஆறே மாசத்துல முடிச்சி, இந்த வருஷமே வெளியிடணும்.. ஓகேவா?" என்றேன்.
இது குடும்பக் கதையோ எமோஷனல் கதையோ கிடையாது. பீரியட் படம். பெரிய பெரிய செட் எல்லாம் போடணும். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்கன்னு கேட்டார் ரவிக்குமார்.

ரவிக்குமார் அந்த நேரம் சுதீப்புக்கு படம் பண்ண அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அவரிடம் சம்மதம் வாங்க வேண்டியிருந்தது. அவர்கிட்ட சொன்னப்போ, 'ரஜினி இத்தனை வருஷம் கழிச்சி படம் பண்றதே பெரிய விஷயம்.. நீங்க அந்தப் படத்தை முடிச்சிட்டு வாங்க'ன்னு சொல்லி அனுமதி தந்தார். அவருக்கு நன்றி.
உடனே தயாரிப்பாளர் யார்னு யோசிச்சேன். ராக்லைன் வெங்கடேஷ் பற்றி எல்லோருக்கும் தெரியும். கர்நாடகாவில் அவர் ஆபத்பாந்தவன் மாதிரி. என்ன பிரச்சினை என்றாலும் எதையும் எதிர்ப்பார்க்காமல் போய் நிற்பார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சமயத்தில் அவர் எவ்வளவு பெரிய உதவிகள் செய்தார்னு எனக்குத் தெரியும்.

எனக்கும் தனிப்பட்ட முறைய பலமுறை உதவியிருக்கார். நான் எப்போதுமே செஞ்ச உதவிகளை மறக்க மாட்டேன். அது எவ்ளோ சின்ன உதவியாக இருந்தாலும் சரி. வெங்கடேஷை உடனை கூப்பிட்டு, இந்தப் படத்துக்கு நீங்கதான் புரொட்யூசர். ஆறு மாசம்தான் டைம் என்றேன். உடனே, நீங்க தேதி மட்டும் கொடுங்க.. நான் பண்றேன், என்றார்.
அப்போது ரவிக்குமார், 'சார் எனக்கு நீங்க ஒரு கண்டிஷன் போட்டீங்க. நானும் ஒரு கண்டிஷன் வச்சிருக்கேன். இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்து பாடல்கள், ரத்னவேலு கேமிரா, சாபு சிரில் செட்' என்றார். இவங்க எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்க.. எப்படி வேலை வாங்கப் போறார்னு நினைச்சு, அதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட், நான் தலையிட மாட்டேன்னு சொல்லிட்டேன்.
அப்போது ஆரம்பித்தது இந்தப் படம். 10.30 மணிக்குத்தான் முதல் ஷாட். மதியம் 3.30 மணி வரை ரெஸ்ட். என்னைச் சுத்தி 30 பேர் எப்போதும் என் உதவிக்காக இருந்தாங்க. என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல.
இந்தப் படத்துக்காக கர்நாடகாவில் பர்மிஷன் பெற முடியாத பல இடங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா ரொம்ப உதவினார். இந்தப் படத்துக்காக ஷூட்டிங் பண்ண லிங்கனமுக்கி அணைப் பகுதியில் 5 பேர் சேர்ந்து போகக் கூட அனுமதியில்ல. ஆனா, கர்நாடகாவுல பொறந்து, தமிழக மக்களோட இதயங்களை வென்றுள்ள ரஜினிக்கு நாம கை கொடுக்கலேன்னா எப்படின்னு கேட்டு அனுமதி வாங்கினாங்க. செல்போன் கூட நுழைய முடியாத பல இடங்கள்ல இந்தப் படம் ஷூட் பண்ணாங்க.
இவ்வளவு பெரிய பட்ஜெட், டெக்னீஷியன்களை வைத்து இவ்ளோ பிரமாண்ட படத்தைப் பண்ண நிச்சயம் கேஎஸ் ரவிக்குமார் ஒருவரால் மட்டும்தான் முடியும். இவ்ளோ பெரிய படத்தை குறைந்த காலத்தில் எடுக்க முடியும்னு இந்த இன்டஸ்ட்ரிக்கு நிரூபிக்கணும்னு நினைச்சோம். எடுத்துட்டோம். படம் பார்த்தீங்கண்ணா எல்லாருக்கும் புரியும்.
பெரிய பெரிய சமையல்காரங்க இந்த சமையலைச் செஞ்சிருக்கோம். சாப்பிட்டுப் பார்த்தோம். நல்லாருக்கு. அதை உங்களுக்கும் தர்றோம். நிச்சயம் பிடிக்கும்னு நம்புறோம்.
டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் பண்றதுக்கான எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு," என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











