தெனாலிராமனுக்கு ஹீரோயின் பிடிக்க வடிவேலு பட்டபாடு!
சென்னை: தனது தெனாலிராமன் படத்துக்கு எத்தனையோ ஹீரோயின்களை தேர்வு செய்தும், எதிராளிகள் அவர்களை விரட்டிவிட்ட கதையை நேற்று செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார் வடிவேலு.
தெனாலிராமன் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்துப் பேசிய வடிவேலு, "எந்த ஹீரோயினைப் பேசி கூட்டிட்டு வந்தாலும், முதல் வேலையா அவங்ககிட்ட தப்புத் தப்பாச் சொல்லி கெடுத்துவிடறதுதான் இங்கிருக்கவங்களோட முதல் வேல.

மெசேஜ் மிரட்டல்
முதல்ல அஞ்சாறு ஹீரோயினிய செலக்ட் பண்ணி வச்சிருந்தோம்... உடனே அவங்களுக்கு மெசேஜா அனுப்புறாய்ங்க. 'வேணாம்... வடிவேலு கூட மட்டும் நடிக்காதே.. மீறி நடிச்சா எந்த ஹீரோவும் கூட நடிக்க மாட்டான்'னு சொல்லி, மெசேஜ் அனுப்பியிருக்காய்ங்க.

டிக்கெட் போட்டு அனுப்பினாய்ங்க..
டைரக்டர் ஒவ்வொரு பொண்ணா காட்ட... அகோரம் சார் டிக்கெட் போட்டு கூட்டியாருவாரு... உடனே நம்மாளுங்க டிக்கட் போட்டு அனுப்பி வச்சிடுவாய்ங்க. கடைசியில இந்தப் பொண்ணு மீனாட்சி தீட்சித்தான் எதைப் பத்தியும் கவலைப்படாம நடிக்க ஒத்துக்கிட்டாங்க.

என்னைத் தெரியுதா?
இப்ப மேடைக்கு வந்தப்போ அந்தப் பொண்ணுகிட்ட, யம்மா என்னைத் தெரியுதா.. என்னைப் பாத்திருக்கியா.. இதாம்மா என் சொந்த உருவம்னு சொன்னேன். காரணம் மீனாட்சி என் சொந்த உருவத்தை பார்த்ததே கிடையாது. ஷுட்டிங் நேரத்துல காட்டிடக் கூடாதுடா-ன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தேன்.

தக்காளிப் பழத்துல தார் ஊத்துன மாதிரி...
என்னைய பாருங்க , அவங்கள பாருங்க, தக்காளி பழத்துல தார் ஊத்தின மாதிரி இருக்குல்ல. ஷுட்டிங்ல கெட்டப்போடதான் போய் அவங்க முன்னாடி நிக்கிறது. டேய், அந்த புள்ள வந்திருக்கா பாருன்னு கேட்டுட்டு, டக்குன்னு கேரவன் உள்ள போயிட்டு மேக்கப்பை போட்டுட்டு வந்து ராஜா வேசத்துல ஸ்டைலா நிக்கிறது.
ஏன்னா, கெடுத்து விட்டுருவாய்ங்களே.. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுது...எந்த நேரத்துல என்ன நடக்கும்னே தெரியாம. நிம்மதியே இல்லாமப் போச்சுண்ணே...

எல்லாம் போச்சாம்..
ஷுட்டிங் நடந்துக்கிட்டிருக்கும் போதே, நின்னுப் போச்சின்னு எழுதிடறாய்ங்க. செட்டை பிரிச்சா, யூனிட்டே பிரிஞ்சி போச்சின்னு எழுதறாய்ங்க. 'அண்ணே, தெரியுமா... போச்சாம்ணே... எல்லாம் போச்சாம்.. இப்பதான் சந்தோஷம். நிம்மதியா தூங்கலாம்ன்றாய்ங்க'...என்ன செய்யச் சொல்றீங்க," என அவர் சொல்லச் சொல்ல கலகலத்தது விழா அரங்கம்.
அதே நேரம், தமிழ் சினிமாக்காரர்கள் எந்த அளவு குழிபறிப்பு, பொறாமை, அடுத்தவனைக் கெடுப்பது போன்றவற்றில் அதீத ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது!


Click it and Unblock the Notifications











