»   »  கன்னட சினிமா கோச்சடையானை டப் பண்ண அனுமதித்தது ஏன் தெரியுமா?

கன்னட சினிமா கோச்சடையானை டப் பண்ண அனுமதித்தது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட சினிமா உலகமே நேற்றிலிருந்து பரபரத்துக் கிடக்கிறது. காரணம், கன்னட சினிமாக்காரர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக பிடிவாதமாக அமல்படுத்தி வந்த டப்பிங் படத் தடை உடைபடுவது குறித்துதான்.

1965-ம் ஆண்டு வெளியான மாயா பஜார் படம்தான் கன்னடத்தில் டப்பாகி வந்த கடைசி படம். அதன் பிறகு டப்பிங் படங்களால் கன்னட சினிமா அழிந்துவிடும் என்ற வாதம் முன் வைக்கப்பட்டதால், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழிப் படங்களையும் டப் செய்து வெளியிட நிரந்தரத் தடை விதித்தது கன்னட திரைப்பட வர்த்தக சபை. இது சட்ட விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்தாலும், தடையை விலக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


How and why Kochadaiiyaan goes to Kannada?

இன்னொன்று, பிரபல கன்னட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் டப்பிங் படங்கள் மீதான தடை தங்களுக்குப் பாதுகாப்பானது என்று நினைத்ததால், இந்தத் தடையை தீவிரமாக ஆதரித்தனர்.


கன்னட தொலைக்காட்சி வர்த்தக சபையும் இந்தத் தடையை அமல்படுத்தியது.


இந்த நிலையில்தான் விஸ்வரூபம் பட விவகாரத்தில், தொழில் செய்யும் உரிமையைத் தடுக்கிறார்கள் என தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு எதிராக இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் (Competition Commission of India) புகார் செய்து புதிய வழியைக் காட்டினார் நடிகர் கமல் ஹாஸன்.


இதில் அவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்ததும், கன்னடத்தில் புதிதாக டப்பிங் பட பிலிம்சேம்பர் என்ற அமைப்பைத் தொடங்கினர் சில தயாரிப்பாளர்கள். இந்த அமைப்பின் சார்பில் கன்னடத் திரையுலகில் நிலவி வந்த டப்பிங் பட தடை குறித்து இந்திய போட்டி ஆணையத்தில் புகார் செய்தனர்.


உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்ட போட்டிகள் ஆணையம், கன்னட பிலிம்சேர், கன்னட தொலைக்காட்சி சேம்பர் ஆகியவற்றுக்கு கடுமையான அபராதத்தை விதித்தது.


இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இந்தத் தடையை எந்த அறிவிப்பும் இல்லாமல் பின்வாங்கிக் கொண்டது கன்னட பிலிம்சேம்பர்.


இதன் விளைவுதான் 50 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் டப்பிங் படமாக கோச்சடையான் வெளியாகிறது.


ஏன் கோச்சடையான்?


இதுகுறித்து கன்னட டப்பிங் பிலிம்சேம்பர் தலைவர் கிருஷ்ண கவுடா கூறுகையில், "இப்போதைக்கு டப்பிங் செய்ய தோதாக உள்ள படம் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான்தான். படத்தின் புவியியல் அமைப்பு, கதை எல்லாமே கன்னட சூழலுக்கும் பொருத்தமாக உள்ளது. கன்னடம், தமிழில் வார்த்தை உச்சரிப்பு பெருமளவு ஒத்துப் போவதால் கோச்சடையானை முதல் படமாக வெளியிடுகிறோம்.


கோச்சடையான் கன்னட பதிப்புக்கு தனி இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடத்தப் போகிறோம். இந்த விழாவுக்கு ரஜினியை அழைக்க முயற்சிக்கிறோம்.


விரைவில் டைட்டானிக், அவதார், பாகுபலி போன்ற படங்களையும் மொழிமாற்றம் செய்யவிருக்கிறோம். கணிசமான படங்களை டப்பிங் செய்து வெளியிட்ட பிறகுதான் புதிய உறுப்பினர்களை எங்கள் அமைப்பில் சேர்க்கப் போகிறோம்," என்றார்.

English summary
How Rajinikanth's Kochadaiiyaan has broke the 50 year ban on dubbing movies in Kannada? Here is the detailed explanation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil