கிரிஷ் 4ன் மூலம் இயக்குனராக மாறும் ஹிருத்திக்ரோஷன்
மும்பை: ஹிந்தித் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் வசூல் நாயகன் என்று புகழப்படும் நடிகர் ஹிருத்திக்ரோஷன் அடுத்து இயக்குனராக அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
தற்போது மொகஞ்சதாரோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹிருத்திக் ரோஷன் இந்தப் படம் முடிவடைந்ததும் கிரிஷ் 4 படத்தின் வேலைகளைத் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாடுகளில் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றன. அதே போன்று கிரிஷ் படத்தின் 4 வது பாகத்தை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள் என்று 2 வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஹிருத்திக்ரோஷன் கூறியிருந்தார்.
தந்தை - மகன் உறவை முதல் பாகத்தில் காட்டியிருந்ததைப் போன்று இந்த பாகத்தில் மேலும் சில விஷயங்களை சேர்க்க ஹிருத்திக் விரும்புகிறார் என்றும், அதற்கான வேலைகளில் அவர் இறங்கியிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது கிரிஷ் படத்தின் அடுத்த பாகத்தை ஹிருத்திக் கண்டிப்பாக இயக்குவார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொகஞ்சதாரோ படத்தில் புலி மற்றும் முதலைகள் உடன் ஹிருத்திக்ரோஷன் மோதுவது போன்ற காட்சிகளை படமெடுக்க தற்போது படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
அதனால் தனது கனவுப் படமான கிரிஷ் 4 ரை தள்ளிவைத்து விட்டு புலி மற்றும் முதலைகளுடன் சண்டையிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹிருத்திக்ரோஷன்.
கிரிஷ் படத்தின் முந்தைய பாகங்களான கொய் மில் கயா(2003), கிரிஷ் (2006) போன்ற படங்கள் நல்ல வசூலை ஈட்டியிருந்தன. கடைசியாக வெளியான கிரிஷ் 3(2013) படம் 95 கோடியில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 290 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











