கூலியைவிட War 2 நல்ல படம்.. மூளையை கழட்டி வச்சிட்டு போங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!
சென்னை: நேற்று வெளியான இரண்டு படங்கள் இந்திய அளவில் மோதிக் கொண்டது. இரண்டு படங்களுமே பான் இந்தியா ஹிட் அடிக்க களமிறங்கியது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வார் 2 படம் குறித்து என்ன சொல்லி உள்ளார் என்பது குறித்து காணலாம்.
வார் 2 படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. இந்நிலையில் இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சன வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் ஸ்பையாக இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். ஒரு கட்டத்தில் இந்திய உளவுத்துறையின் நம்பிக்கையை இழந்து விடுகிறார். காரணம், அவரது மேல் அதிகாரியை தன் கையால் சுட்டுக் கொலை செய்கிறார். ஏன் கொன்றார் என்பது ஒரு காரணம் என்றாலும், ஹ்ரித்திக் ரோஷன் இடத்திற்கு வேறு ஒரு ஏஜென்ட்டை நியமிக்கிறார்கள். அவர் தான், ஜூனியர் என்.டி.ஆர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள், மோதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

த்ரம்: கதாநாயகர்கள் இருவருக்கும் இவர்கள் வைத்த ஓப்பனிங் சீனைப் பார்த்துவிட்டு 'திக்' என ஆகிவிட்டது. இதனால் இரண்டையும் பார்த்துவிட்டு ஓப்பனிங் சீனே இப்படி இருக்குதே, மூன்று மணி நேரம் படம் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் படம் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆனால் போக போக படத்துடன் ஒன்றி படத்தை பார்க்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம், படத்தை நல்ல தரத்தில் பண்ணியிருந்தாங்க. ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற மோடில் படத்தை எடுக்காமல் லைவ் லொக்கேஷனில், சிறப்பான சண்டைக் காட்சிகளுடன் எடுத்திருந்தார்கள்.
சண்டைக் காட்சிகள்: ஸ்பை யுனிவர்ஸ் படம் என்பதால், கதை பெருசாக இல்லை என்றாலும், நிலம், நீர், ஆகாயத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் வைத்துள்ளார்கள். அவையெல்லாம் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக இந்த படத்தில் செய்துள்ளார்கள். விமானத்தில் வைத்த சண்டைக் காட்சி மட்டும் தேவையில்லாதது. இதைத் தவிர்த்திருக்கலாம். படம் முழுவதும் ஆக்ஷன் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவும் அருமை. முதல் பாதியைப் பொறுத்தவரை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. இரண்டாம் பாதியில், ஃபிளாஷ் பேக், அதைத் தொடர்ந்து வந்த காட்சிகள் எல்லாம் சொதப்பல். கிளைமாக்ஸ் கொஞ்சம் நன்றாக இருந்தது.

மூளையை கழட்டி: இந்த மூன்று மணி நேர படத்தை ஓரளவுக்கு உட்கார்ந்து பார்க்க முடிந்தது என்றால், அதற்கு காரணம், படத்திற்கு நன்றாக செலவு செய்து எடுத்துள்ளார்கள். சண்டைக் காட்சிகள் நமது தரத்தை விட சிறப்பாக எடுத்துள்ளார்கள், லைவ் லொக்கேஷன்களுக்குச் சென்று படத்தை எடுத்துள்ளார்கள். தமிழிலும் வசனங்கள் நன்றாக இருந்தது. கிரீன் மேட் வைத்து எடுத்த காட்சிகள் நன்றாக இல்லை, அதைத் தவிர்த்து படத்தை ஓரளவுக்கு நல்ல படம் என்றே கூறலாம். ஆனால் ஒரு கண்டிஷன் மூளையை கழட்டி வைத்துவிட்டு போகனும். ஆக்ஷன் மட்டும் பிடிக்கும் என்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











