Hulk Hogan: இமயமே சரிஞ்சுடுச்சே.. ஹல்க் ஹோகன் மறைவு.. ஜான் சீனா, சில்வஸ்டர் ஸ்டாலோன் இரங்கல்
லாஸ் ஏஞ்சல்ஸ்: என்னதான் WWE ஸ்டேஜிங் ரியாலிட்டி ஷோ என்று சொன்னாலும், அதில் ஸ்டண்ட் செய்ய அவர்கள் தங்கள் உடலை வலுப்படுத்துவது மட்டுமின்றி சண்டை பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதிரடி காட்டி உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். சிறு வயதில் டிரம்ப் கார்டு விளையாடும் போது, ஹல்க் ஹோகன், ராக், அண்டர்டேக்கர், கேன், பிக் ஷோ, ரிக்கிஷி, ஜான் சீனா கார்டுகள் எல்லாம் வந்தால் கெத்தாக இருக்கும்.
எதிரில் விளையாடுபவர்கள் அப்படியே அவர்கள் கார்டை கொடுத்து விடுவார்கள். ஸ்கூல் முடிந்ததும் சேர்த்து வைத்த காசை எடுத்துக் கொண்டு பிளே ஸ்டேஷனுக்குச் சென்று WWE கேமை நம்மில் பலரும் விளையாடி இருப்போம். ராக் நம்பர் ஒன்னாக வருவதற்கு எல்லாம் முன்பாக ஹல்க் ஹோகன் தான் உலகளவில் WWE சூப்பர் ஸ்டாராக இருந்தார்.

8 அடி உயரம் என சொல்லப்பட்ட 7.7 அடி உயரம் கொண்ட ஆண்ட்ரே தி ஜெயன்ட்டையே பந்தாடிய ஹல்க் ஹோகன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவை அறிந்த உலக ரசிகர்களும் ஹாலிவுட் பிரபலங்களும் WWE வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த ஹல்க் ஹோகன்: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அகஸ்தியாவில் 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி பிறந்த டெரி ஜீனி போலியா (Tere Gene Bollea) மல்யுத்த வீரராக வேண்டும் என்பதற்காக தனது உடலை கட்டுமஸ்த்தாக உருவாக்கினார். 1977ம் ஆண்டே மல்யுத்த வீரராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும் 1983ம் ஆண்டு WWF போட்டிகளில் அவர் பங்கேற்ற நிலையில் தான் உலகளவில் ஹல்க் ஹோகனாக பிரபலமடைந்தார். ஹல்க் ஹோகன் தலையில் கட்டியிருக்கும் கர்ச்சிப் போல வேண்டும் என இங்கே பலரும் அப்போதே 10 ரூபாய் பெரிய கர்ச்சிப் வாங்கி தலையில் கட்ட ஆரம்பித்தனர். அவரது மீசை ஸ்டைலையும் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் உலகளவில் பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஏகப்பட்ட போட்டிகளில் அதிரடியாக சண்டையிட்டு 5 முறை WWF சாம்பியனாக திகழ்ந்தவர் ஹல்க் ஹோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்வஸ்டர் ஸ்டாலன் இரங்கல்: 1982ம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டாலன் இயக்கி நடித்த ராக்கி 3 படத்தில் தண்டர் லிப்ஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் WWE வீரர்கள் நடிக்கலாம் என்கிற பாதையை போட்டுக் கொடுத்தார். ராக்கி 3 படத்தைத் தொடர்ந்து நோ ஹோல்ட்ஸ் பார்ட், சப் அர்பன் கமாண்டோ, மிஸ்டர் நானி, சாண்டா வித் மசல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராக், ஜான் சீனா, படிஸ்டா உள்ளிட்ட பலர் இப்போது ஹாலிவுட் படங்களில் அதிகளவில் நடித்து வர காரணமே இவர் போட்ட பாதை தான் என்கின்றனர். தன்னுடைய தண்டர் லிப்ஸ் இறந்துவிட்டானே என சில்வஸ்டர் ஸ்டாலன் உருக்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சில்வஸ்டர் ஸ்டாலனுக்கு 79 வயதாகிறது குறிப்பிடத்தக்கது.
ஜான் சீனா உருக்கம்: 7.7 அடி ஆண்ட்ரே ஜெயண்ட்டை ஹல்க் ஹோகன் அடித்து நொறுக்கும் அசத்தலான போட்டோவை ஷேர் செய்து WWE சாம்பியனும் நடிகருமான ஜான் சீனா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலரும் ஹல்க் ஹோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஒரு சகாப்தத்தின் மறைவு என்றும் இமயம் சரிந்து விட்டது என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











