twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒரு திரைப்படத்திற்கு வேண்டிய முதன்மை வேடத்தினரைத் தவிர்த்துப் பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட துணைவேடத்தினர் தேவைப்படுவார்கள். நாயகனுக்கும் நாயகிக்கும் அமைய வேண்டிய வேடப்பொருத்தம் எத்துணை இன்றியமையாததோ அவ்வாறே பிற நடிகர்களும் பிசிறு தட்டாமல் அமைய வேண்டும். இரண்டே இரண்டு காட்சியில் தோன்றும் நிலையில் ஒரு நடிகர் தேவைப்பட்டாலும் அந்தப் பாத்திரத்திற்குரியவரை மிகச்சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தும் பிற வேடத்தினர் பொருத்தப்பாடு கொண்டவர்களாக இல்லையெனில் அந்தக் காட்சியின் இயற்கை கெட்டுப்போகும். காட்சிப் பின்னணியில் தோன்றுகின்றவர்கள் உரிய மெய்ப்பாடுகளோடு நிற்க வேண்டியது கட்டாயம்.

    வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளில் காட்சிச் சட்டகத்திற்குள் பொருந்தாமல் நிற்கின்ற பொதுமக்களைக் கவனித்துப் பாருங்கள், அவர்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது அப்பட்டமாகத் தெரியும். பதினாறு வயதினிலே திரைப்படத்தில் இடம்பெறும் “செந்தூரப்பூவே…” பாடலில் மயில்மகள் வயல்வெளியில் தனியொருத்தியாய் ஓடியாடித் திரிவதாகத்தான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு தென்னையடியிலும் வரப்பிலும் ஒவ்வொருவர் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்றைய படப்பிடிப்பு வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் இது தற்செயலான தவறென்று ஏற்றுக்கொள்ளலாம். இன்றைக்கு ஒன்றுக்குப் பத்துப்பேர் காட்சி எடுப்புகளைத் தளத்திரை (Monitor) வழியாகப் பார்க்கிறார்கள். அதனால் சிற்றிலை அசைவைக்கூடத் தவிர்த்துவிட முடியும்.

    Hundreds Of Artists With Remarkable Acting Talent

    கோவை செந்தில் என்று ஒரு நடிகர் இருந்தார். கவுண்டமணியோடு வருகின்ற செந்தில் அல்லர் இவர். புதிய பாதையில் “மகனே….” என்று பார்த்திபனிடம் அடிவாங்குபவர். எங்க சின்ன ராசாவில் “பொரிகடலை வியாபாரம்…” செய்யும் சம்பந்தியாய் வருபவர். ஒடியலான உடலினராய்ச் சற்றே உயரமாக இருப்பார். அவர் ஏற்று நடித்த சிறுவேடங்களுக்கு இன்னொருவரை நினைத்துப் பார்க்கவே இயலாது. அவரைப் போன்றவர்கள் அன்றாடப்பாடாக நடிக்க வந்தவர்கள். ஒரு திரைப்படத்தின் தனிக்காட்சிக்கு வேண்டிய வலுவைத் தூக்கிச் சுமப்பவர்கள். “பாக்கியரஜ், விக்ரமன் போன்றவர்கள் ஒரு காட்சியில் நாங்கள் நடிக்க வேண்டும் என்றால் ஓரிரு நாளாயினும் காத்திருந்து அந்தக் காட்சியை எடுப்பார்கள்… அவர்களைப் போன்ற இயக்குநர்கள் ஒரு காட்சியில் தோன்ற வேண்டியவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்…” என்கிறார் அவர். அவர் அவ்வாறு கூறியபோதுதான் எனக்குப் பல உண்மைகள் விளங்கின. பிற பாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வதில் நம் இயக்குநர்கள் காட்டியிருக்கும் முனைப்பு கதைத்தேர்வுக்கும் காட்சித் தேர்வுக்கும் இணையான ஒன்றுதான்.

    “வரூஉம் ஆனா வராது…” என்ற தொடருக்குப் புகழ்பெற்ற 'என்னத்த’ கண்ணையாவை வைத்துப் படமெடுத்த பாடுகளை இயக்குநர் பி.வாசு கூறும்போது “ஒரு மூத்த கலைஞரைப் பயன்படுத்தி எடுக்கும்போது அந்தக் காட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்…” என்கிறார். பி.வாசு போன்றவர்கள் திரையில் நன்கு உலவிய நடிகர்களை அல்லாமல் பிற புதியவர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்குவது இல்லை. வணிகப் படங்களுக்குப் பொருத்தமான முகங்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்தினால்தான் வெற்றியைத் தொட முடியும். கிடைத்தவர்களைக்கொண்டு படமெடுத்தால் அங்கேயே இடைநிலைத்தரத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று பொருள்.

    என்னத்த கண்ணையா 'மௌனம் சம்மதம்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றுவார். வழக்குக்கு வேண்டிய செய்தியொன்றைக் கையூட்டு பெற்றுக்கொண்டு தருகின்ற கடைநிலை ஊழியர் வேடம். மம்முட்டியைத் தூக்கிச் சாப்பிடும்படியான இயல்பு கலந்த நகைச்சுவை நடிப்பை அக்காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார். அதுவரை விளையாட்டுத்தனமான காதற்குறும்புடைய இளைஞனாக நடித்த பப்லு என்னும் நடிகர் “பாண்டி நாட்டுத் தங்கம்” திரைப்படத்தில் கொடுமைக்கார எதிர்நாயகனாக நடித்தார். தாம் முறுக்கிய மீசையோடும் சினந்த விழிகளோடும் தோன்றிய காட்சிகளை ஏற்காத பார்வையாளர் திரள் “டேய்… இது பப்லுடா.. பப்லு…” என்று சிரித்ததாகக் கூறுகிறார்.

    Hundreds Of Artists With Remarkable Acting Talent

    அறிமுக நிலையிலுள்ள நடிகர் ஒருவர் தாம் ஏற்று நடிக்கும் பாத்திரங்களின் வழியாகவே பார்வையாளர்களிடத்தில் நினைவுகொள்ளத்தக்க மனப்பதிவை ஏற்படுத்துகிறார். அந்த மனப்பதிவுதான் அவர் அடுத்ததாக ஏற்று நடிக்கும் வேடங்களுக்குப் பொருத்தப்பாடுகளைப் பெற்றுத்தரும். அதற்கு நேர்மாறாக நடித்துப் பெயர்பெற வேண்டுமானாலும் கதையும் காட்சிகளும் அவரைச் சுற்றியதாக வலிமையாய் அமைக்க வேண்டும்.

    பசி திரைப்படத்தில் ஓட்டுநரின் உதவியாளராக அறிமுகமான நடிகர் செந்திலுக்குப் பாக்கியராஜின் 'பொய்சாட்சி’ திரைப்படத்தில்தான் நீளமான காட்சிகள் அமைந்தன. ”கும்புடறேனுங்க… ஊரு புளியம்பட்டி… என் பேரு பண்டாரம்… சினிமால ஆக்டு குடுக்கலாம்னு வந்தேன்… ஒருத்தன் எம்ஜிஆரைத் தெரியும் சிவாஜியைத் தெரியும்னு கூட்டியாந்து கையில இருக்கிற பணத்தையும் காசையும் புடுங்கிட்டு விட்டுட்டான்… சாப்பிட்டு மூனு நாளாச்சி… கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா…எங்க ஆச்சி டவுனுப்பக்கம் வரும்… கொடுத்தனுப்பறேன்…” என்று பேசும் உரையாடல்தான் அவரைக் கவனிக்க வைத்தது. அவரை ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாயகன் ஏமாற்றுவதாக அமைந்த காட்சியில் அவர் ஏற்படுத்திக்கொண்ட வெள்ளந்தி என்னும் மனப்பதிவுதான் பிற்காலம் முழுக்க அவர்க்கு உதவியது.

    ஒல்லியான உயரமான நாயகிக்குத் தந்தையாக நடிக்குமாறு தோற்றப்பொருத்தத்தோடு புதியதாகவும் இருக்க வேண்டுமென்றால் நடிப்பறியாத 'பட்டிமன்றம் இராஜா’ போன்றவர்களைக்கூட பெரும்படத்திற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதே படத்தில் கறுப்பு நிறத்திற்காக எழுதப்பட்ட நகைச்சுவைக் காட்சிக்குச் சாலமன் பாப்பையா பயன்படுத்தப்படுவார். மேற்பார்வைக்கு மேடைப் பேச்சாளர்களுக்குத் தமிழ்த்திரையில் கிடைத்த சிறப்பாகத் தோன்றினாலும் அதன் அடியாழத்திலுள்ள நோக்கம் அவர்களின் தோற்றப்பொருத்தம்தான்.

    இடிச்சபுளி செல்வராஜ் என்னும் நடிகரை அறிந்திருப்பீர்கள். எண்ணற்ற படங்களில் நகைச்சுவை கலந்த சிறுவேடங்களில் நடித்தவர். உரையாடலைத் தந்து நடிக்க வைப்பதைக் காட்டிலும் அவரைக் காட்சிச் சட்டகத்தில் ஓர் ஓரத்தில் இடம்பெறச் செய்தாலே போதும். காட்சிக்கு வேண்டிய முகத்தோற்றங்களைப் பின்னணியில் இருந்தபடி வழங்கிக்கொண்டே இருப்பார். எவ்வொன்றுக்கும் தன் உடல்மொழியால் ஆற்றுகின்ற எதிர்வினைதான் நடிப்பு எனப்படுவது. இடிச்சபுளி செல்வராஜ் அத்தகைய நடிப்புக்குரிய கலைஞர். கோபி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட ஊர்ப்புறக் கதைகளில் திருப்பூர் இராமசாமி என்பவர் தவறாமல் இடம்பெற்றிருப்பார். கொங்குத்தமிழில் அவர் பேசும் இரண்டொரு சொற்றொடர்கள் அக்காட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவகை.

    திரைப்படங்களை எவ்வளவு எளிதாக மதிப்பிட்டுவிடுகிறோம் ! அதன் பின்னே ஒவ்வொன்றையும் துல்லியமாகப் பார்த்து பார்த்துச் செய்கின்றார்கள். கலைஞர்கள் தமக்குரிய வாய்ப்பு கிடைத்ததும் தம்மை முழுமையாக அக்காட்சிக்கு ஒப்படைக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது ஒவ்வொரு துளித்திறமையின் வெள்ளம். ஒரு மணித்துளியளவே நிகழும் காட்சியென்றாலும் அங்கே சிறிய வேடத்தில் தோன்றி நிறைவான பங்களிப்பைத் தந்த கலைஞர்கள் நம்மிடையே நூற்றுக்கணக்கில் இருக்கின்றார்கள்.

    English summary
    Cinema article about Hundreds of artists with remarkable acting talent
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X