நம்புறேன்.. ஜகமே தந்திரம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல தியேட்டரில் தான் வெளியாகும்.. தனுஷ் ட்வீட்!
சென்னை: நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தான் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனுஷ் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் தனுஷ் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளன.
விரைவில் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் தேதி வெளியாகும் என தெரிகிறது.

மாஸ்டருக்கும் இதே நிலைமை
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கும் இதே நிலைமை தான். நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தான் அந்த படமும் வெளியாகும் என்கிற ரூமர் வைரலானது. இறுதியில் தியேட்டரில் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தற்போது, மாஸ்டர் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என தகவல்கள் சில நாட்களாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிடியா? தியேட்டரா?
ஜகம் குணமடைந்த பின்னர் ஜகமே தந்திரம் திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில நாட்களாக நெட்பிளிக்ஸில் தான் ஜகமே தந்திரம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் பரவிய நிலையில், ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். ஒடிடியா? தியேட்டரிலா? அதிகாரப்பூர்வமா சொல்லுங்கப்பா என்றும் கேட்டனர்.

தனுஷ் தான் நம்பிக்கை
இதற்கிடையே கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்கிற அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட, ஜகமே தந்திரம் ஒடிடியில் வெளியாவதை சமாளிக்கத்தான் அப்படியொரு அறிவிப்பு எனவும் வதந்திகள் பரவின. மேலும், தனுஷ் மட்டுமே ஒரே நம்பிக்கை ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.
நம்புகிறேன்
இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்ப்பது போலவே ஜகமே தந்திரம் தியேட்டரில் தான் வெளியாகும் என நம்புகிறேன் என ட்வீட் போட்டுள்ளார். ஹீரோவே சொல்லிட்டாரு, அப்புறம் தயாரிப்பு தரப்பு வேற முடிவையா எடுக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்
நடிகர் தனுஷை தொடர்ந்து படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜும் அதே போல நம்புகிறேன் என ட்வீட் போட்டுள்ளார். இவர்கள் இருவரையும் தாண்டி படத்தை தயாரித்துள்ள ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வேறு முடிவை எடுக்காது என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஒரே நாளில்
ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஒடிடி தளத்தில் வெளியாகவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாகவும் கருத்துக்கள் உலா வருகின்றன. ஆனால், இன்னமும் ஜகமே தந்திரம் எப்படி எந்த தேதியில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை ஒய் நாட் ஸ்டூடியோஸ் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

அரசு அனுமதி
பிப்ரவரி ஒன்று முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக ஜகமே தந்திரம் படத்தை முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்து விட்டு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு பிறகு ஒடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நாமும் நம்புவோம்!


Click it and Unblock the Notifications











