முதலமைச்சரான பிறகு விஜய் பேச்சு.. அவகாசம் கொடுங்கனு கேட்டிருக்காரு.. என்ன செய்யப்போகிறார்?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்திருக்கிறது. இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்றதும் இல்லங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்கள் பாதுகாப்புக்கான சிங்க பெண் அதிரடி படை, போதை பொருளுக்கு எதிராக மாநகராட்சி, மாவட்டங்களில் தடுப்பு படை உருவாக்கப்படும் ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்று முடித்ததும் மேடையில் பேசிய விஜய், "எல்லோருக்கும் வணக்கம்.. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்று இருந்த உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளை நான். எனக்கும் வறுமை, பசி என்னவென்றால் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. நான் உங்கள் பிள்ளை மாதிரி, மகன் மாதிரி, தம்பி மாதிரிதான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தீர்கள். இப்போது உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த உங்கள் விஜய்யை, நீ வா விஜய் தம்பி நாங்கள் இருக்கிறோம் என சொல்லி அவ்வளவு அன்பாக ஏற்றுக்கொண்டீர்கள்.

தேவதூதன் இல்லை: இந்தப் பயணத்தில் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தன. அவமானப்படுத்தினார்கள். எனக்காக கூட இருந்த உங்களுக்கும் அதே மாதிரிதான் நடந்தது. அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடைய வலி, வேதனையை உங்களுடையதாக எடுத்துக்கொண்டீர்கள். சி.ஜோசப் விஜய் எனும் நான் என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள். நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் இயல்பான மனிதன்தான். ஏமாற்றும்படியான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். எது சாத்தியமோ அதை செய்வேன். சாத்தியம் இல்லாததையும் இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
கஜானா காலி: கஜானாவை முந்தைய அரசு வழித்துவிட்டு சென்றிருக்கிறது. உள்ளே போய் பார்த்தபோதுதான் தெரிகிறது. தமிழ்நாடு அரசு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்போகிறேன். உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிட்டுத்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அது எனக்கு உதவியாக இருக்கும். போதை பொருளுக்கு எதிராக இன்றிலிருந்தே செயல்களை தொடங்குவேன். என்னை எதிர்த்தவர்களாக இருந்தாலும் அவர்களும் என் மக்கள்தானே.
அதை செய்யமாட்டேன்: மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட எடுக்கமாட்டேன். இந்த விஜய் தவறு செய்யமாட்டான். தவறு செய்யவும் விடமாட்டான். அது என்கூடவே இருப்பவர்களாகவே விடமாட்டேன். நாம் வென்றுவிட்டோம் ஒரு ஆட்டம் ஆடலாம் என்று யாருக்காவது இருந்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள். இங்கே ஒரே சென்ட்டர்தான். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள்,மீனவர்கள், என எல்லோருமே நன்றாக இருப்போம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நம் கோட்பாடு. அனைத்து மதத்தினரின் முகம்தான் இந்த விஜய்யின் முகம். இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குட்டி நண்பா, நண்பீஸ்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் இந்த விஜய் மாமா செய்துகொடுப்பார் என்று நம்பலாம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் கட்சியினர் இல்லையென்றால் எதுவுமே இல்லை. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதியெல்லாம் இப்போதிருந்து தொடங்கிவிட்டது. ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
