twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலீஸ் தேடுவதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா? - வடிவேலு காட்டம்

    By Sudha
    |

    சென்னை: போலீஸ் என்னைத் தேடுவதற்கு நான் ஒன்றும் என்கவுன்டர் குற்றவாளி அல்ல. நான் தலைமறைவாகவுமில்லை. நான்தான் நியாயமாக புகார் தந்திருக்க வேண்டும், என்று வடிவேலு கூறியுள்ளார்.

    சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு கூறியதாவது:

    நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுன்டர் குற்றவாளி அல்ல.

    கொஞ்ச நாள் பட வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு இருக்கேன்.

    ஏமாந்தவன் நானே...

    உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய இடங்களை பறி கொடுத்து மோசம் போய் நிற்கிறேன். பிரச்சினைக்குரிய இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

    2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும்.

    பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

    சிரிக்க வைச்சி சம்பாதிச்ச பணம்

    உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன்.

    மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன்.

    எங்கும் ஓடல...

    என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டார். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்," என்று கூறியுள்ளார்.

    English summary
    Actor Vadivelu reacted for the first time after the land grabbing charge framed against him. In his interview the comedian told that he is either in Chennai and Madurai and ready to face the charges legally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X