இரண்டு அமைச்சர்கள் போட்டியிடுறாங்க.. நான் தூத்துகுடி வேண்டாம்னு சொன்னேன்.. TVK ஸ்ரீநாத் பேட்டி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளரும் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் தூத்துக்குடியில் தனது பிரச்சாரத்தை தொடங்க மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் இந்த தொகுதி வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனாலும் விஜய் மற்றும் கட்சி தலைமையின் முடிவு காரணமாகவே இந்த தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் பேசுகையில், நான் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்பது தலைவரும் தமிழக வெற்றி கழகமும் இணைந்து எடுத்த முடிவு. தலைவருக்கு தெரியும் யார் யாரை எங்கெங்கு வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று. என்னுடைய ஆசை வேறொன்றாக இருந்தாலும் தலைவர் சொல்லியதால் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் அது மட்டும் இல்லாமல் நான் பிறந்த ஊர், நான் பிறந்த மண் அதனால் நான் இங்கு போட்டியிடுகிறேன்.
விஜய் தலைவராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் தலைவராக நடந்து கொள்கிறார் அதே நேரத்தில் நண்பராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் நண்பராக நடந்து கொள்கிறார். தமிழக வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதுமே ஆதரவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூத்துக்குடியிலும் அந்த மாற்றம் ஏற்படும் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

இரண்டு அமைச்சர்கள்: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் திமுகவின் தற்போதைய அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் களம் மிகவும் சூடாகத்தான் இருக்கிறது ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்று நான் நம்புகிறேன். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எனக்கு முத்தம் கொடுத்து அனுப்புகையில் வெற்றியுடன் வா நண்பா என்று தெரிவித்தார் தலைவர் விஜய். தூத்துக்குடியில் தவெகவிற்கு மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மாற்றத்திற்காக மக்கள் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய், விஜய்யின் அந்த ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் அவரால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
செய்யத் தவறிய: இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாத விஷயங்களை மக்களுக்காக நாங்கள் செய்வோம். தேர்தல் வாக்குறுதி என்பது தனியாக இருந்தாலும் நாங்கள் அடிப்படையில் இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை செய்ய தவறியதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.
சாதி கலவரங்களைத் தடுக்க: மாற்றுக்கட்சினர் களத்தில் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டாலும் நாங்கள் நாகரிகமாக தான் நடந்து கொள்வோம் எங்கள் தலைவர் எங்களை அப்படித்தான் ஆளாக்கி உள்ளார். தென் மாவட்டத்தில் சாதிய கலவரங்களை தடுக்கவும் எங்களிடத்தில் திட்டங்கள் உள்ளன அதை விரைவில் வெளியிடுவோம் என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர் ஸ்ரீநாத் கூறினார்.


Click it and Unblock the Notifications











