For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எம்.ஜி.ஆர் சொன்னதற்காக அரசு வேலையை ராஜினாமா செய்தேன்- கவிஞர் ந.காமராசன்

  By R VINOTH
  |

  சென்னை: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதால் தான் நான் பார்த்து வந்த அரசு வேலையை துணிந்து ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க வில் சேர்ந்தேன் என்று கவிஞர் நா.காமராசன் கூறியுள்ளார். எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் நா. காமராசன், தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

  எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவை ஆரம்பித்த பிறகு ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமியுடன் தோட்டத்துக்குச் சென்று அவரை சந்தித்தேன். அப்போது ஒருவரை அறிமுகப்படுத்தி, இவர் தயாரிக்கவிருக்கும் நீதிக்குத் தலை வணங்கு படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். இப்படித்தான் நான் படவுலகில் பாடலாசிரியராக அறிமுகமானேன்.

  I have resigned my Govt Job and Joined the AIADMK Part-Poet Na.Kamarasan

  நான் எழுதிய முதல் பாடலே எம்.ஜி.ஆர். நடித்த படமாக அமைந்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் முதன்முதலாக எழுதி நீதிக்குத் தலை வணங்கு படத்தில் இடம் பெற்ற கனவுகளே ஆயிரம் கனவுகளே என்று தொடங்கும் பாடல் சூப்பர் ஹிட்டாகி எனக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து ஊருக்கு உழைப்பவன், பல்லாண்டு வாழ்க, இதயக்கனி, நவரத்தினம் போன்ற பல எம்.ஜி,ஆர் படங்களில் பாடல்கள் எழுதினேன்.

  திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர் என்னைக் கூப்பிட்டு அ.தி.மு.க.வில் சேரும்படி சொல்லவே, நான் சற்று தயங்கினேன். நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும். உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள், என்றார். எனவே துணிந்து நானும் அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

  நான் பீட்டர் சாலையிலிருந்த குடியிருப்பை காலி செய்து விட்டு, எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி லாயிட்ஸ் சாலையில் உள்ள பெரிய வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். சொன்னபடியே எம்.ஜி.ஆர், வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் கட்சிக் கூட்டங்களில் பேச மாதம் இருபது நாட்களுக்குக் குறையாமல் வெளியூர் சென்று விடுவேன். அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்க என் மனைவி பயப்பட்டதால் வேறு சிறிய வீட்டுக்கு குடி பெயர்ந்தேன்.

  Bigg Boss 3 எந்தநேரம் அத்தை நீ செத்தேன்னு சொன்னாரோ முகென், நடந்துடுச்சு Bigg Boss 3 எந்தநேரம் அத்தை நீ செத்தேன்னு சொன்னாரோ முகென், நடந்துடுச்சு

  அரசாங்க வேலையை ராஜினாமா செய்த பிறகு சோதனை என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. எனவே பத்திரிகையை மூன்றாவது இதழுடன் நிறுத்தும்படியாகிவிட்டது.

  எம்.ஜி.ஆர். முதல்வராகி படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் எழுதினேன். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எனக்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் எனக்கு நிறைய பாடல்கள் எழுத சந்தர்ப்பம் அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை நான் இழந்திருக்கிறேன்.

  இளையராஜா இசையில் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நான் எழுதிய சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது என்ற பாடல் பிரபலமடைந்து, எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த காக்கி சட்டை படத்தில் நான் எழுதிய வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே என்ற பாடல், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற முத்துமணிச்சுடரே வா, வெள்ளை ரோஜா படத்தில் இடம் பெற்ற ஓ மானே மானே போன்றவை எனக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. பாடும் வானம்பாடி படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருந்தேன்.

  என் மகள் திருமணத்துக்கு தலைமை தாங்க அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் திருமணத்தன்று அவருக்கு பல்வலி ஏற்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டார்.

  ஆனால் அமைச்சர்கள் எல்லோரையும் திருமணத்துக்கு அனுப்பி வைத்ததுடன், நடிகர் பாக்யராஜை அழைத்து தனக்கு பதிலாக சென்று திருணத்தை நடத்தி வைக்கும்படி சொல்ல, அதன்படியே, பாக்யராஜ் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அடுத்த நாள் தோட்டத்துக்கு அழைத்து என் மகளுக்கு விருந்து கொடுத்த எம்.ஜி.ஆர், என் மகளுக்கு சீர் செய்து வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது.

  இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், கதர் வாரியத் துணைத்தலைவர் என்று பல பொறுப்பக்களை வகித்த எனக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியனவும் கிடைத்திருக்கின்றன. என்கிறார் கவிஞர் நா.காமராசன்.

  English summary
  I had resigned from the government job suddenly, I was looking for and I joined the AIADMK party, as per instruction given by MGR, Poet Na.Kamarasan recalled.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X