பிரகாஷ் ராஜால் தாய்லாந்தில் ஃபேக்ஸ் மெஷின் தேடி அலைந்தேன்... இயக்குநர் ஞானவேல்
சென்னை: ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில்தான் அந்தப் பட குழுவினர் அதனை கொண்டாடினர்.
அடுத்ததாக ஒரு இந்தி திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் ஞானவேல்.
இந்நிலையில் திரைத்துறைக்குள் தான் வந்து அனுபவம் பற்றி பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஞானவேல்.

தோசா கிங்
ஜெய் பீம் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிறைய இந்தி தயாரிப்பு நிறுவனங்கள் படம் இயக்க தன்னை அணுகினார்கள். இந்தி தெரியாத காரணத்தினால் அதனை தவிர்த்துவிட்டேன். இப்போது இந்தி தேவைப்படுபவதால் கற்றுக் கொண்டு தற்சமயம் தோசா கிங் இந்தி படம் இயக்க தயாராகிவிட்டேன் என ஞானவேல் கூறியிருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தையே இந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்புகள் வந்தும் அதில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டாராம்.

மீண்டும் சூர்யா
ஜெய் பீமிற்கு முன்னரே சூர்யாவிற்கு ஒரு கதை சொல்லி அவரும் அதில் நடிக்க சம்மதித்தாராம். ஜெய் பீம் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இல்லை என்பதால் கதையில் யாரும் எதிர்மறை கருத்து கூறவில்லையாம். பின்னர் சூர்யா நடிக்கிறார் என்றவுடன் அவரைவிட செங்கேணிக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக பலரும் கூறினார்கள். ஆனால் சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு பாடல் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நான் அந்தக் கதையில் உறுதியாக இருந்தேன் என்று ஞானவேல் கூறியிருக்கிறார்.

குருநாதர் பிரகாஷ்ராஜ்
பத்திரிக்கை துறையிலிருந்து சினிமாவிற்கு ஞானவேல் வருவதற்கு முக்கியமான காரணமாக விளங்கியவர் பிரகாஷ்ராஜ். ஞானவேலை எப்போதும் தன்னுடைய நண்பர் என்றுதான் பிரகாஷ்ராஜ் குறிப்பிடுவாராம். காரணம், பத்திரிகையாளராக அவரை நிறைய முறை பேட்டிகள் எடுத்துள்ளாராம் ஞானவேல். ஆனால் பிரகாஷ்ராஜை ஒரு குருவாகத்தான் பார்க்கிறார் ஞானவேல். அவரை பற்றி ஒரு தொடர் தான் எழுதியபோது ஒரு இடத்தில் சென்று சந்திக்க முடியாத அளவிற்கு பிசியாக நடித்துக் கொண்டிருந்தாராம்.

பேட்டிகள்
அலைபேசியில் பேட்டி காண்பதை பிரகாஷ்ராஜ் விரும்ப மாட்டார் என்பதால் தான் எங்கிருந்தாலும் அந்த இடத்திற்கு விமான டிக்கெட் போட்டு ஞானவேலை வரவழைத்துவிடுவாராம். ஒரு முறை தாய்லாந்தில் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு வரவழைத்து பேட்டி கொடுத்துள்ளார். கைப்பட எழுதிய அந்த பேட்டியை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கு ஃபேக்ஸ் மெஷின் தேவைப்பட்டதாம். தாய்லாந்தில் எதை எதையோ தேடி மக்கள் அலைவார்கள் ஆனால் நான் ஃபேக்ஸ் மெஷினை தேடி அலைந்தேன் என்று வேடிக்கையாக தனது அனுபவத்தை பற்றி கூறியிருக்கிறார் ஞானவேல்.


Click it and Unblock the Notifications











