குஷ்புவுக்கு அப்புறம், ஹன்சிகாதான்... சொல்கிறார் சுந்தர்.சி !
சென்னை: ''குஷ்புவுக்குப்பின், எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகாதான். சித்தார்த் என் தம்பி மாதிரி '' என பாடல் வெளியீட்டு விழாவில் டைரக்டர் சுந்தர் சி. கூறினார்.
சித்தார்த்-ஹன்சிகா ஜோடியாக நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தை சுந்தர் சி. டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் தலைமை தாங்கினார்.
விழாவில் நடிகர்கள் ஆர்யா, சித்தார்த், கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் குஷ்பு, ஹன்சிகா, பட அதிபர்கள் தனஞ்செயன், எச்.முரளி, பிலிம்சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாண்டிராஜ், கே.வி.ஆனந்த், கண்ணன், நலன் குமரசாமி, பாலாஜி மோகன் ஆகியோரும் பேசினார்கள்.
பாடல்களை நடிகர் ஆர்யா வெளியிட, டைரக்டர் கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். விழாவில், டைரக்டர் சுந்தர் சி. பேசியதாவது ...

ஜாலியா இருப்பா...
‘‘சித்தார்த்துக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்று நான்தான் விளக்கினேன். வாழ்க்கையில் பதற்றம், பரபரப்பு இருக்கக்கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. எப்போதும் ஜாலியாக-சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விளக்கினேன்.

சித்தார்த் என் தம்பி...
அதற்குப்பின், ஆளே மாறிவிட்டார். எனக்கு ஏற்றபடி அவரை மாற்றி விட்டேன். கூடப்பிறந்த தம்பி மாதிரி ஆகிவிட்டார். படம் முடிந்ததும், சித்தார்த்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ‘‘நாம் சேர்ந்து வேலை பார்த்தது மறக்க முடியாத சந்தோஷமான அனுபவம்'' என்று அனுப்பினேன். அதை பெயருக்கு அனுப்பவில்லை. மனதில் இருந்து அனுப்பப்பட்டது.

ஹன்சிகாவின் ஒத்துழைப்பு...
ஹன்சிகாவை நடிக்க வைத்ததும் நல்ல அனுபவம். நான், படம் ஆரம்பிக்கும் முன் கதை விவாதத்துக்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொள்வேன். ஆனால், படத்தை ஆறு மாதத்துக்குள் முடித்துவிட நினைப்பேன். விரைவாக முடிந்தால்தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். நேரத்தை வீணாக்காமல் படப்பிடிப்பு நடத்துவேன். அதற்கேற்ற படி, ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார்.

குட்டி குஷ்பு....
ஹன்சிகாவை, குட்டி குஷ்பு என்கிறார்கள். உருவத்தால் மட்டுமல்ல, நல்ல நடிகை என்ற விதத்திலும் ஹன்சிகா என்னை கவர்ந்து விட்டார். குஷ்புவை வைத்து மூன்று படங்கள் டைரக்டு செய்தேன். அவருடைய அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும்.

குஷ்புவுக்குப்பின்...
குஷ்புவுக்குப்பின், எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகாதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவ்வப்போது கேரவனுக்குள் போய் ஒளிந்துகொள்கிற பழக்கமெல்லாம் இவரிடம் கிடையாது. படப்பிடிப்பு முடிந்துதான் போவார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஜப்பான்லயும் இப்படிதான்...
இங்கு மட்டுமல்ல. ஜப்பான் போனபோதும் இப்படித்தான் நடந்து கொண்டார். அங்கே கடுமையான குளிர். கதாநாயகி எப்படி உடையணிந்திருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். உறைய வைக்கும் குளிரிலும் தாங்கிக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்...
நான் எத்தனையோ நடிகைகளை இயக்கியிருக்கிறேன். யாரும் இப்படி ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. நான் பார்த்ததிலேயே எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகாதான். மற்ற நடிகைகள் வருத்தப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகாதான்' , என இவ்வாறு சுந்தர் சி. கூறினார்.

நிஜ குட்டி குஷ்பூஸ்...
விழாவின் மற்றொரு சிறப்பு, நெடுநாட்களாக மீடியாவுக்கு மறைத்து வைத்திருந்த தனது மகள்களை விழாவில் பங்கெடுக்கச் செய்துள்ளனர் குஷ்பூ, சுந்தர்.சி தம்பதியினர்.


Click it and Unblock the Notifications











