நல்ல நண்பனை இழந்துவிட்டேன்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.. சோகத்தில் இயக்குநர் ஷங்கர்
சென்னை: இயக்குநர் ஷங்கரின் பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்தின் திடீர் மரணம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
முதல்வன், பாய்ஸ் மற்றும் சிவாஜி என இயக்குநர் ஷங்கரின் மூன்று பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இயக்குநர் கே.வி. ஆனந்த்.
நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் இரங்கல் பதிவிட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

முதல்வன்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான முதல்வன் படத்திற்கு கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல்வன் படத்தில் வரும் பிரம்மாண்ட டிராபிக் சீன்களை வெற்றிகரமாக படமாக்கி அசத்தி இருந்தார் கே.வி. ஆனந்த். அதனை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் உடன் பாய்ஸ் படத்திலும் பணியாற்றினார்.

சிவாஜி படத்தில்
2005ம் ஆண்டு கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக பின்னரும் 2007ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கே.வி. ஆனந்த். அந்த படத்தின் அறிமுக பாடலான பல்லேலக்கா பாடலில் ஒரு காட்சியில் இயக்குநர் ஷங்கர் மற்றும் தோட்டா தரணியுடன் இணைந்து கே.வி. ஆனந்தும் கேமியோவாக வந்து செல்வார்.

ஷங்கரை போலவே
இயக்குநர் ஷங்கரை போலவே தானும் பிரம்மாண்ட இயக்குநராக மாற வேண்டும் என நினைத்து ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் கே.வி. ஆனந்த். பாடல்களுக்கு ஷங்கரின் படங்களில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அதே அளவுக்கு கே.வி. ஆனந்த் படங்களிலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. கோ படத்தில் ஒற்றைக் கல்லில் ஜீவாவும் கார்த்திகா நாயரும் நடனமாடுவார்கள். அதே போல, பனி சிற்ப கண்காட்சியில் வெண்பனியே பாடலையும் படமாக்கி இருப்பார்.
நல்ல நண்பனை இழந்துவிட்டேன்
இந்நிலையில், இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு செய்தியை அறிந்த இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல நண்பனையும் சிறந்த ஒளிப்பதிவாளரையும் பிரில்லியன்ட்டான இயக்குநரையும் இழந்துவிட்டேன். நண்பா உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன். உன்னை இழந்து வாடும் உனது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என ட்வீட் போட்டுள்ளார் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











