லூசிஃபர் ரீமேக்.. நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா? என்ன சொல்கிறார் இயக்குனர் மோகன் ராஜா?
ஐதராபாத்: 'என் தந்தை தயாரித்தப் படத்தில் சிரஞ்சீவியை ரசிகனாகப் பார்த்தேன். இப்போது அவரையே இயக்குகிறேன் என்று இயக்குனர் மோகன் ராஜா கூறினார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், லூசிஃபர். மோகன்லால் நடித்திருந்த இந்தப் படத்தை பிருத்விராஜ் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் தமிழில் டப் ஆகி வெளியானது. மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய்குமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியிருந்தார். படத்தை விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. பின்னர், சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்குவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் விலகி விட்டதாகவும் விவி விநாயக்கே இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

மோகன் ராஜா
ஆனால், இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கில் இருந்து பல படங்களை தமிழில் ரீமேக் செய்துள்ள மோகன் ராஜா, தெலுங்கில் இருந்துதான் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இந்தப் படத்தின் பூஜை புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்தது.

சூப்பர் ஸ்டார்கள்
படம் பற்றி இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, லூசிஃபர் படம் எனக்குப் பிடித்திருந்தது. மோகன்லால், சிரஞ்சீவி இருவருமே சூப்பர் ஸ்டார் நடிகர்கள். சிரஞ்சீவியின் இமேஜுக்கு தகுந்தது போல கதையை கொஞ்சம் மாற்றி இந்தப் படத்தை இயக்குகிறேன். இதை ரீமேக் என்று சொல்வதை விட தழுவல் என்று சொல்லலாம்.

ஒரு ரசிகனாக
சிரஞ்சீவி, நடித்த ஹிட்லர் (1997) படத்தை என் தந்தை எடிட்டர் மோகன் தயாரித்தார். அப்போது அப்பாவுக்கு உதவியாக செட்டில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ரசிகனாக, அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறேன் என்றார்.

தெரிவிக்க இயலாது
இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாக வந்த தகவல் பற்றி கேட்டபோது, இப்போதுதான் பூஜை போட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. யார், யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களை இப்போதே தெரிவிக்க இயலாது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றார்.

காஜல் அகர்வால்
நடிகர் சிரஞ்சீவி, இப்போது ஆச்சாரியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கொரட்டலா சிவா இயக்கும் இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











