இப்பவே நான் அரசியல்வாதிதான்! - நடிகர் விவேக்
சென்னை: சினிமாவில் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி வருகிறேன். அதுவும் ஒரு வித அரசியலே. அந்த வகையில் இப்போதே நான் அரசியல்வாதியாகத்தான் உள்ளேன், என்றார் நடிகர் விவேக்.
ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த விவேக், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கூலிப்படை கலாச்சாரம்
நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளேன். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பாலக்காட்டு மாதவன், வைராஜா வை, அஞ்சான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

மரக்கன்றுகள்
சினிமா தாண்டி, சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் கடந்த 3 ஆண்டுகளில் 21.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதே என் இலக்காகும்.

இதுவும் அரசியல்தான்
அரசியலுக்கு வருவீங்களான்னு கேக்கிறாங்க. சினிமாவில் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் சொல்கிறேன். இதுவும் ஒருவகை அரசியல்தான். இப்போது நானும் அரசியல்வாதிதான். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன்," என்றார்.

காந்தி பேரனல்ல
அவரிடம், 'ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே?' என்று கேட்டதற்கு நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லை என்றார்.

பெரியார்தான்
முன்னதாக விழாவில் பேசும்போது, திரைப்படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையுடன் கொடுத்ததால்தான் சின்ன கலைவாணர் பட்டம், பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இதற்கு ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார்தான் காரணம். நான் மரம் நடுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்கள் விவேகானந்தரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்," என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











