இப்பதான் களமே சூடு பிடிக்குது.. சண்டைக்கு ரெடி.. நீங்க வாங்க விஜய் பார்த்துக்கலாம்.. ஜூலி வீடியோ
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2026 வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தவெக தலைமையிலான ஆட்சிதான் தமிழ்நாட்டில் என்று கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. பலரும் தவெகவுக்கும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவின் தீவிர ஆதரவாளரான ஜூலி, தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவிற்காக சென்னை முழுவதும் சுழன்று பணியாற்றினார். குறிப்பாக, விஜய் போட்டியிட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில், அவருக்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றி கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இந்த அரசியல் மாற்றம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலி வீடியோ: இந்நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தவெகவினருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இதற்காக திமுகவினர் நாங்கள் ஒருபோதும் முடங்கிப் போய்விட மாட்டோம். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்த காலத்தை விட, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காலமே அதிகம். தோல்வியைக் கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்கள் இன்னும் மூர்க்கமாக செயல்படுவோம்.

சண்டைக்கு ரெடி: 'ஜூலியைக் காணவில்லை' என்று பலரும் போஸ்டர் ஒட்டி வருகிறீர்கள். நான் எங்கும் ஓடிவிடவில்லை, பயந்து ஒளிந்து கொள்ளவும் இல்லை. நான் இங்கேயே தான் இருக்கிறேன். தைரியம் இருந்தால் வாருங்கள், களத்தில் சந்திக்கலாம். சண்டை செய்வதெல்லாம் திமுகவினருக்கு மிகவும் சாதாரணமான விஷயம்." இவ்வாறு அந்த வீடியோவில் ஜூலி ஆவேசமாகப் பேசியுள்ளார். ஜூலியின் இந்த அதிரடி பேச்சு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications