நான் 'டண்டணக்காதான்'.. ஆனால் சம்பாதிச்சிருக்கேன் 'டன் கணக்கா'.... டி.ஆர். பெருமிதம்!
சென்னை: நீ ஒரு டண்டணக்கா, உனக்கு அவ்வளவு தான் தெரியும் என்றார்கள். ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பார்த்து என்ன சொன்னால் என்ன? நான் சம்பாதித்து இருக்கிறேன் டன் கணக்கா. இவ்வளவு இருந்து எனக்கும் ஆப்புன்னா, உனக்கு எந்தளவிற்கு வைப்பான் ஆப்பு யோசிச்சுக்கோ எனத் தெரிவித்துள்ளார் டி.ராஜேந்தர்.
பத்ரி இயக்கத்தில் சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தனது பாணியில் மைக்கில் தாளமிட்டு, 'மைக் டெஸ்ட்' என்றபடி தனது பேச்சைத் தொடங்கினார் டி.ஆர். அப்போது அவர் கூறியதாவது :-

அவா... புவா...
நான் சிவனை எப்போதும் மறப்பதில்லை. உலகத்துக்கே ஒரு சிவன். இந்த மேடயில் மூன்று சிவா. ஒரு பக்கம் தொழிலாளர் சம்மேளனம் சிவா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிவா, இன்னொரு பக்கம், நடிகர் எழுத்தாளர் சிவா.. இப்படி மூன்று சிவா இவர்களுக்கு மத்தியில் நான் பேச வேண்டும் என்று உங்களுக்கு ஒரு அவா. ஆனால், இந்த திரையுலகம் தான் எங்களுக்கு எல்லாம் போட்டது புவா.

விசில் சத்தத்திற்காக அல்ல...
இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் விமல், சிவா, சதிஷ், சிம்ஹா மற்றும் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் விசில் சத்தம் வரும் என்பதற்காக பேசுபவன் அல்ல. பேசினால் விசில் சத்தம் வர வேண்டும். என்னை உருவாக்கிய இந்த திரையுலகையும், தயாரிப்பாளர்களையும் நான் எண்ணிப் பார்க்க கூடியவன்.

எம்.ஏ. போடவில்லை...
நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் இன்ஷா அல்லாஹ். மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் எல்லாம் வல்ல இறைவன். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் டி.ராஜேந்தர் என்று போட்டார்கள். எம்.ஏ என்று போடவில்லை. எனக்கு வேண்டாம்.

பட்டம் தம்பட்டம் ஆகிவிடும்...
ஏனென்றால் அது நான் படிச்சு வாங்கின பட்டம். சினிமாவில் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால், எனது பெயருக்கு பின்னால் நான் பட்டம் போட்டுக்கிட்டதே இல்லை. நான் பட்டத்தை எல்லாம் நம்புறதில்லை. சினிமாவில் பட்டம் எல்லாம் அப்போ அப்போ பறந்துவிடும். இது தான் உண்மை. பட்டம் ஆகிவிடும் சமயத்தில் தம்பட்டம். நான் படிச்சு வாங்கின பட்டம் மட்டும் தான் எனக்கு நிரந்திரம்.

ஒரு இதயம் அழைத்தது...
யார் நம்மளை உருவாக்கினார்களோ, அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். என்னை இந்த விழாவிற்கு வருவதற்கு இம்ப்ரஷ் பண்ணியது ஒரு இதயம். அவர் இயக்குநர் பத்ரி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு டி.ஆர் வர்றாரா, சிங்கப்பூரில் இருந்து வருகிறேன் என்று என் தாய் சொல்றாங்க. அவருடைய ஆசைக்காகவது நீங்க வரவேண்டும் என்று சொன்ன வார்த்தை என்னை இங்கே வரவைத்தது' என்றபடி லேசாக கண் கலங்கினார்.

தாய்ப் பாசம்....
பின்னர் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தவர், ‘ஒரு தாயின் சபதம் எடுத்தவன், தாய் தங்கை பாசம் எடுத்தவன், என் தங்கை கல்யாணி எடுத்தவன், என் தங்கைக்கு ஒரு கீதம் எடுத்தவன் இப்படி தாய்மார்களுக்காக படம் எடுத்தவன். அந்த தாய் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி, என்னை அழைத்தார்.

வாழ்க்கை ஒரு சக்கரம்...
சினிமாவில் வெற்றி தோல்வி எல்லாம் மாறி மாறி வரும். ஜெயித்தவுடன் காலரை தூக்கி விடக் கூடாது. சக்கரம் மேலேயும், கீழேயும் மாறி மாறி வந்தால் தான் ஓடும். நான் மேலே இருப்பேன் என்று சொன்னால், ஒரே இடத்தில் நிற்கும். இது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம், சுத்துக்கிட்டே இருக்கணும்.

ஒரு தலை காதல்...
'ஒரு தலை ராகம்' படத்துல வந்த என்னை, இன்றைக்கு 'ஒரு தலை காதல்' வர்றேன். என்னுடைய மகன் சிம்பு கதாநாயகனாக இருக்க கூடிய காலத்தில் 'வீராசாமி' படத்தில் நடித்தேன். அவரை நான் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க கூப்பிடவில்லை. யாரோட படத்துக்காக நட்புக்காக அவர் போய் நடிப்பாரு. ஆனால் நான் கூப்பிடவில்லை. உடனே தலைக்கனம் என்று நினைக்க கூடாது. தன்னம்பிக்கையோட இலக்கணத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்றேன்.

எல்லாம் ஒரு தில்...
என்னை மதிக்காத இடத்திற்கு நான் போகவே மாட்டேன். என்னை மதித்தால், மண் குடிசையைக் கூட மதிப்பேன். என்னை மதிக்காதவன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மவுண்ட் பேட்டனாக இருந்தாலும் சரி போக மாட்டேன். அது ஒரு தில்.

ஆண்டவனுக்கு நன்றி...
காலுக்கு செருப்பு கூட வாங்க முடியாத என்னை, சிறப்புரை ஆற்றக் கூடிய அளவிற்கு என்னை சினிமா உலகம் ஆக்கியிருக்கிறது என்றால் ஆண்டவனுக்கு நன்றி. ஆண்டவனுக்கு அப்புறம், திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த ரசிகர் பெருமக்களுக்கு நன்றி.

ஏ.ஆர்.ரஷ்மானின் இன்ஸ்பிரேஷன்...
நீ ஒரு டண்டணக்கா, உனக்கு அவ்வளவு தான் தெரியும் என்றார்கள். ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பார்த்து என்ன சொன்னால் என்ன? நான் சம்பாதித்து இருக்கிறேன் டன் கணக்கா. இவ்வளவு இருந்து எனக்கும் ஆப்புன்னா, உனக்கு எந்தளவிற்கு வைப்பான் ஆப்பு யோசிச்சுக்கோ.

என் அருமை தமிழ் மக்களே...
இப்போ டயட்ல இருக்கேன். சினிமால ஒண்ணு நடிக்கணும். இல்லனா தடிக்கணும். ஒரு தலை காதல் படத்துல நடிச்சுட்டு இருக்கேன். "என் அருமை தமிழ்நாட்டு மக்களே" எல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது இங்கே. டிரெண்ட் சேஞ்ச். கலகலப்பா எடுக்கணும். எனக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. எப்போதுமே இசையிலே இருப்பேன்.

அரசியல் சூது...
நாட்டில் எல்லாவற்றிலும் சூது இருக்கிறது. அரசியலிலும் சூது இருக்கிறது. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் அடிச்சுக்கிற மாதிரி தெரியும். அவர்களுக்குள் ஒரு அன்னடர்ஸ்டாண்டிங் இருக்கும். யாருக்குமே தெரியாது' என இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











