அது மோசமான நாட்கள்... தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன்... பிரபல நடிகை பகீர்
சென்னை: அப்போது தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தேன், அந்த மோசமான நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று நடிகை தன்யா மேரி வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில், திருடி, வீரமும் ஈரமும் படங்களில் நடித்தவர் தன்யா மேரி வர்கீஸ். பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.
அங்கு ரெட்சில்லீஸ், கேரளா கபே, நாயகன் உட்பட பல படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டு ஜான் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

கட்டுமான நிறுவனம்
பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவருக்கு ஜோகன் என்ற மகன் இருக்கிறார். ஜான், குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அதில் தன்யா இயக்குனராக இருந்தார். திருவனந்தபுரத்தின் பல இடங்களில் ஜானின் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2011 ஆம் வருடம் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக அறிவித்தனர்.

ரூ.100 கோடி வசூல்
அதன்படி, 20 தனி வீடுகள் மற்றும் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்ய இருப்பதாகவும், அதை 2 ஆண்டுகளில் ஒப்படைப்பதாகவும் சொல்லி ரூ.100 கோடி வசூல் செய்தனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை வழங்காததால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் நடிகை தன்யா மற்றும் ஜான் குடும்பத்தினர் தலைமறைவானார்கள்.

தனிப்படை
அவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். பின்னர் நடிகை தன்யா உள்ளிட்ட 3 பேரை போலீசார் நாகர்கோவிலில் கைது செய்திருந்தனர். இந்தச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே, அந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வந்த தான்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு, பஹத் பாசில், நஸ்ரியா நடித்த கும்ப்ளங்கி நைட்ஸ் படம் மூலம், மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தற்கொலை
இந்நிலையில், அவர் அந்த காலக்கட்டத்தில் தான் தற்கொலை செய்துகொள்ள இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, அந்த பிரச்னை என்னை அதிகமாகப் பாதித்தது. அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். நான் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்துவிட்டன. என் கணவரின் ஆதரவால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

நம்ப வேண்டாம்
நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆனால் என் கணவர் குடும்பத்தினர் பிசினஸ் செய்கின்றனர். அவர்களுக்கு என் ஆதரவைக் கொடுத்தேன். சில காலத்துக்குப் பிறகு நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன். நாம் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். ஆனால், கண்மூடித் தனமாக யாரையும் நம்ப வேண்டாம் என்று. அதை என் கணவரும் புரிந்து கொண்டார். இன்று அந்தப் பிரச்னைகள் முடிந்துவிட்டன. இப்போது நான் அந்த விஷயங்களை மறக்க நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











